search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.
    X
    பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    மேலூரில் நாகம்மாள் கோவில் விழா

    மேலூரில் நாகம்மாள் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    மேலூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதில் மேலூர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளம் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து பால்குடம் எடுத்தும், வெகு நீளமான அலகுகள் குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    நகரின் மைய பகுதியான மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகைக்கடை பஜார், பெரியகடைவீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்கள் கோவில் முன்பாக இருந்த பெரிய அண்டாக்களில் நிரப்பப்பட்டது. அதன்பின்பு நாகம்மாளுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவின் 2-வது நாளான நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பஸ்நிலையம், சேனல்ரோடு, அரசுஆஸ்பத்திரி, நகைக்கடைபஜார், பெரியகடைவீதி, செக்கடிபஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதையொட்டி மேலூர் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் நான்குவழிச் சாலையில் திருப்பிவிடப்பட்டன. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×