search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ரெங்கநாதர் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்த காட்சி.
    X
    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ரெங்கநாதர் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்த காட்சி.

    காவிரி தாய்க்கு மங்கல பொருட்களை சீர் வரிசையாக கொடுத்தார் நம்பெருமாள்

    ஆடி 28-ம் நாளையொட்டி காவிரி தாய்க்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் மங்கலபொருட்களை சீர் வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
    கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கி பூம்புகார் அருகே கடலில் கலக்கும் காவிரி ஆறு தமிழக மக்களால் தாயாக வணங்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் 18-ம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி தாய்க்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் மட்டும் இன்றி பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பிலும் காவிரி தாய்க்கு ஆடிப்பெருக்கு தினத்தன்று மங்கல பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது தொன்று தொட்டு மரபாக இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு கடந்த 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அன்று கோவில் சார்பில் காவிரி தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆடி 28-ம் நாளில் சீர்வரிசை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி ஆடி மாதம் 28-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் நம்பெருமாள், கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் இருந்தவாறு வழிநடை உபயங்களை கண்டருளினார்.

    மழை விட்ட பின்னர் காலை 11.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட நம்பெருமாள் காவிரி கரையில் உள்ள அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4 மணிவரை அங்கு நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர் வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டுச்சேலை, மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து பட்டர் ஒருவர் கொண்டு வந்தார். யானை ஆற்றங்கரையில் வந்து நின்றதும் காவிரி ஆற்றில் சீர்வரிசை பொருட்கள் விடப்பட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, ரங்கா என்ற கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா அன்று தண்ணீர் வரவில்லை. ஆடி 28-ம் நாளான நேற்று கால் நனையும் அளவிற்கு தண்ணீர் சென்றதால் நம்பெருமாள் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

    பின்னர் இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    Next Story
    ×