search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கீதை சொன்ன கண்ணனை வரவேற்போம்
    X

    கீதை சொன்ன கண்ணனை வரவேற்போம்

    கிருஷ்ணன் பிறந்த இத்திருநாளான இன்று கிருஷ்ண ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    “நல்லவர்களை காப்பாற்றுவதற்கும், கொடியவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு பிறவியிலும் அவதாரம் செய்கிறேன்” என்று சொன்ன கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று(திங்கட்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீமன் நாராயணன் தட்சணாயணத்தின் ஆவணி மாதம் அஷ்டமி நாளன்று ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைச்சாலையில் தேவகி, வசுதேவருக்கு மைந்தனாக கிருஷ்ணனாக அவதரித்தார்.

    கிருஷ்ணன் பிறந்த இத்திருநாள் கிருஷ்ண ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுவதும், உறி அடிப்பதும் அன்று கட்டாயம் நடைபெறும். வடநாட்டில் இந்த விழாவை 10 நாட்கள் வரை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணன் பெயரை உச்சரிப்பதும், அவரது சிலைக்கு பூஜை செய்வதும் வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்களையும் நீக்கி இன்பம் ஏற்பட செய்கிறது.

    நான்கு திருக்கரங்களுடன் பிறந்த கிருஷ்ணன் நான்கு வேதங்களுக்கும் நாயகனாக விளங்குகிறான். கிருஷ்ணனின் அவதார வரலாறு மகத்துவம் மிக்கது.

    யாதவர்களின் அரசனான உத்ரசேனனின் மகள் தேவகி. இவருடைய கணவர் வசுதேவர். தேவகியின் அண்ணன் கம்சன். தேவகிக்கு பிறக்கும் 8-வது குழந்தையினால் கம்சனுக்கு முடிவு ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறினார்கள். இதனால் அச்சமுற்ற கம்சன் தேவகி, வசுதேவரை சிறையிலடைத்து விடுகிறான். அங்கே தேவகிக்கு பிறந்த 7 குழந்தைகளையும் கொன்று விடுகிறான். 8-வது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தான். இக்குழந்தைக்கும் கம்சனால் ஆபத்து ஏற்படுமோ என்று தேவகியும், வசுதேவரும் பயந்தனர்.

    அப்போது ஆச்சரியமாக குழந்தை கிருஷ்ணன் பேசினான். தன்னை ஒரு கூடையில் வைத்து ஆயர்பாடிக்கு கொண்டு செல்லும்படி கூறினான். அதன்படியே தந்தை வசுதேவர் கிருஷ்ணனை ஒரு கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு சென்றார்.

    அப்போது சிறைக்கதவு தானாக திறந்து வழிவிட்டது. வெளியே பலத்த மழை கொட்டியது. யமுனை நதி வழிவிட, குழந்தை மீது மழை பெய்யாமல் இருக்க ஆதிசேசன் படம் எடுத்து வந்தது. கோகுலத்தில் பிறந்த பெண் குழந்தையை கிருஷ்ணனுக்கு பதிலாக சிறையில் வைத்துவிட்டு கோகுலத்தில் கிருஷ்ணனை வைத்து விட்டனர். கிருஷ்ணன் விடப்பட்ட இடம் நந்தகோபாலன் யசோதை இல்லம்.

    ஆயர்பாடியிலும், பின்னர் பிருந்தாவனத்திலும் கிருஷ்ணன் வளர்கிறான். பாலகன் பருவத்தில் சின்ன கண்ணன் செய்த லீலைகள் அற்புதங்கள் ஏராளம். தன்னை கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்ற அரக்கியை கொன்றான். கோபியர்களுடன் காதல் லீலை புரிந்த மாயவன், கவுரவர் சபையில் திரவுபதியை துகிலுரியும் கட்டத்தில் சேலை தந்து மானம் காத்தான். குருஷேத்திர யுத்தத்தில் உறவினர்களை பார்த்து தளர்ந்து போய் காண்டீபத்தை கீழே போட்டுவிட்ட அர்ச்சுனனை ஆசுவாசப்படுத்த கீதாஉபதேசம் செய்து உலகப் புகழ்பெற்ற பகவத் கீதையை தந்தான்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று பகலில் விரதம் இருந்து இரவில் கண்விழிக்க வேண்டும். வீட்டில் பூஜை அறையில் கிருஷ்ணர் விக்கிரகம் அல்லது படத்தை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். வீட்டின் வாசற்படியில் இருந்து பூஜை அறை வரைக்கும் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாக இட வேண்டும். இப்படி செய்வதால் கிருஷ்ணன் வீட்டுக்குள் நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணர் அஷ்டோத்திர நாமாவளி அல்லது பாடல்களை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜைக்கு வெண்ணெய், அவல், வெல்லச்சீடை, உப்புச்சீடை, கற்கண்டு அப்பம் போன்ற பலகாரங்களை செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யவேண்டும்,

    பூஜை முடிந்ததும் கிருஷ்ணன் பாடல்களை பாடி கும்மி, கோலாட்டம் ஆடலாம். பூஜை முடித்து ஆரத்தி எடுக்க வேண்டும். பகவத்கீதை படிப்பதும் கோவிலுக்கு சென்று பக்தி சொற்பொழிவுகளை கேட்பதும் நன்மை தரும்.

    கிருஷ்ணனின் திருநாமத்தை உச்சரிப்பதாலும் அவனை பூஜை செய்வதாலும் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கி இன்பம் ஏற்பட செய்கிறது. சிறையிலே பிறந்தவன், நம்மை வாழ்க்கை சிறையிலே இருந்து விடுவிப்பதற்காக அருளாசி புரிகிறான்.

    -செந்தூர் திருமாலன்.
    Next Story
    ×