search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரியநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் உலா வந்த காட்சி.(உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்)
    X
    பெரியநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் உலா வந்த காட்சி.(உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்)

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா நிறைவு

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி லட்சார்ச்சனை விழா நிறைவடைந்தது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிலட்சார்ச்சனை விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் அம்மனுக்கு தினசரி 4 ஆயிரம் அர்ச்சனைகள் வீதம் கடந்த 10-ந்தேதி வரை ஒரு லட்சம் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. ஆடி லட்சார்ச்சனை நிறைவு நாளான நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவில் சன்னதி முன்பு வெள்ளிக்குடம் வைத்து புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் 108 கலசங் கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    அதையடுத்து காலை 10 மணிக்கு விநாயகர் பூஜை, 108 கலச பூஜை, 10 ஆயிரம் லலிதா சகஸ்ராம அர்ச்சனை உள்ளிட்டவைகள் நடந்தது. அதன் பின்னர் சவுபாக்கிய திரவியங்கள், மங்கல பொருட்கள், பட்டுப்புடவைகள், துணிகள் மற்றும் வெள்ளிக்கொலுசு, வெள்ளி பொருட்கள் தங்கத்தாலி உள்ளிட்ட பொருட்கள் யாக குண்டத்தில் போடப்பட்டு பெரியநாயகி அம்மனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 108 கலசங்களை எடுத்துக்கொண்டு பக்தர்கள் கோவிலை வலம் வந்து பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. பூஜை, யாக நிகழ்ச்சிகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட குருக்கள்கள் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளினார். பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகளில் உலா வந்து 9.30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    Next Story
    ×