search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    ஆடித்திருவிழாவையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், கொடியேற்றம், கடந்த 8-ந் தேதி அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருளுதண்டம், 9-ந் தேதி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்தநிலையில், ஆடித்திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் இருந்து தொடங்கிய இந்த தேர், சிங்காரப்பேட்டை, அப்புச்செட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சேர்மன் ரத்தினசாமி தெரு, சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்ட விழாவையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், தக்கார் சபர்மதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கார வண்டிகளின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது, இதில் முதல் 3 இடங்களை பெறும் அலங்கார வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள், கோப்பைகள் வழங்கப்படும், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சத்தாபரணம், 15-ந் தேதி வசந்த உற்சவம், 18-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல், 19-ந் தேதி சிறப்பு அலங்காரம், 20-ந் தேதி மகா அபிஷேகம், 22-ந் தேதி பாவாடை நைவேத்யம், 26-ந் தேதி நெய் அபிஷேகம், 27-ந் தேதி 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    இதேபோல், சேலம் செவ்வாய்பேட்டை சிங்காரப்பேட்டையில் உள்ள தேவி ராஜபொன்காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. அலங்கரிப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சிங்காரப்பேட்டை, அப்புசெட்டித்தெரு, கபிலர் தெரு, சேர்மன் ரத்தினசாமி தெரு வழியாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை திரளான பக்தர்கள் இழுத்து சென்றனர். முன்னதாக கோவிலில் அபிஷேக ஆராதனை நடந்தது.
    Next Story
    ×