search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபா உருவாக்கிய லெண்டித் தோட்டம்
    X

    சீரடி சாய்பாபா உருவாக்கிய லெண்டித் தோட்டம்

    தினமும் பாபா அதிகாலையிலேயே எழுந்து சீவடி கிணற்றில் இருந்து குடம், குடமாக தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தார். இதனால் லெண்டித் தோட்டம் முழுவதும் பாபாவின் பாத மலர் கமலங்கள் பட்டுள்ளன.
    சீரடி தலத்தில் சாவடியில் வழிபாடுகளை செய்து விட்டு, அருகில் உள்ள லெண்டித் தோட்டத்துக்கு செல்லலாம். அங்குள்ள பசுமையான மரங்களும், மலர்ச் செடிகளும், பச்சைப் புல்வெளிகளும் நம் மனதை கொள்ளை கொள்ளும்.

    சாய்பாபாவே இந்த தோட்டத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபா சீரடிக்கு வந்த போது அந்த இடம் பொட்டல் காடு போல கிடந்தது. பக்தர்கள் மொய்க்காத தொடக்கக் காலத்தில் பாபா, அந்த பொட்டல் பகுதியை வெட்டி, கொத்தி சீர்திருத்தி தோட்டத்தை ஏற்படுத்தினார். அங்கு விதம், விதமாக செடிகளை நட்டு, அவற்றுக்கு அவர் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தார்.

    செடி வளர்க்க தண்ணீர் தேடி வேறு இடங்களுக்கு அலையக் கூடாது என்பதற்காக லெண்டித் தோட்டத்துக்கு உள்ளேயே கிணறு ஒன்றை பாபாவே ஏற்படுத்தினார். அந்த கிணறுக்கு சீவடி என்று பெயர். பாபா உருவாக்கியதால் சீவடி கிணறும் புனிதம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே சீரடி செல்லும் போது தவறாமல் சீவடி கிணற்றையும் வழிபடுங்கள்.

    தினமும் பாபா அதிகாலையிலேயே எழுந்து சீவடி கிணற்றில் இருந்து குடம், குடமாக தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தார். இதனால் லெண்டித் தோட்டம் முழுவதும் பாபாவின் பாத மலர் கமலங்கள் பட்டுள்ளன. லெண்டி தோட்டத்தில் மலர் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக, அவர் அருகில் உள்ள ரகாதா கிராமத்துக்கு சென்று விதைகள் வாங்கி வருவார். அதைப் பார்த்து பக்தர்களும் பாபாவுக்காக பூச்செடிகளை கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் பொட்டல் வெளியாகக் கிடந்த இடம் வெகு விரைவில் நந்தவனம் போல மாறியது.

    லெண்டி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், மரங்களுக்கும் பாபாவே தம் கைப்பட தண்ணீர் ஊற்றினார். வேறு யாரையும் அவர் தண்ணீர் ஊற்ற அனுமதிக்கவில்லை. இந்த வி‌ஷயத்தில் வாமன் தாத்யா என்பவர் பாபாவுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

    தினமும் அவர் 2 மண்பானைகளை கொடுத்தார். பாபா அந்த மண்பானைகளில் தண்ணீர் ஊற்றி, தோளில் சுமந்து சென்று செடிகளுக்கு ஊற்றுவார். மாலையில் அந்த மண்பானைகளை வேப்ப மரத்தடியில் கொண்டு போய் வைப்பார். அந்த 2 பானைகளும் தாமாக உடைந்து விடும். மறுநாள் காலை வாமன் தாத்யா வேறு 2 மண்பானைகளை வாங்கி வந்து கொடுப்பார். லெண்டி தோட்டம் நந்தவனமாக மாறி பூத்துக் குலுங்கும் வரை பானைகள் கொடுப்பதை வாமன் தாத்யா வழக்கத்தில் வைத்திருந்தார்.



    அந்த தோட்டத்துக்குள் சென்று ஒவ்வொரு பகுதியையும் அவசரப்படாமல் ஆற அமர்ந்து பாருங்கள். பாபா ஒவ்வொரு மரத்தையும் எந்த அளவுக்கு விரும்பி வளர்த்தார் என்பது தெரிய வரும். லெண்டித் தோட்டம் பகுதியில் ஏற்கனவே ஒரு பெரிய அரச மரம் இருந்தது. அதன் அருகில் ஒரு வேப்ப மரத்தை நட்டு பாபா வளர்த்தார். அந்த மரம் இன்னமும் லெண்டித் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்து நிற்பதைக் காணலாம்.

    அந்த மரங்கள் உள்ள இடத்தில் பாபா ஒரு பெரிய பள்ளம் தோண்டி அகண்ட நந்தா விளக்கு தீபம் ஏற்றி வைத்தார். தத்தாத்ரேயர் உருவச் சிலையையும் அங்கு அவர் பிரதிஷ்டை செய்தார். நந்தா தீபம் இடைவிடாமல் எரிவதற்காக அப்துல்லா என்பவரை பொறுப்பாளராக பாபா நியமித்தார்.

    அப்துல்லாவை தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பாபா தினமும் காலை, மதியம், மாலை மூன்று நேரமும் நந்தா தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வந்து விடுவார். அந்த தீபத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயம் அரச மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனை செய்தபடி இருப்பார். சில நாட்கள் அங்கு மணிக்கணக்கில் கூட பாபா அமர்ந்து விடுவது உண்டு.

    லெண்டித் தோட்டத்துக்குள் வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் நந்தா தீபம் உள்ள பகுதியை சர்வ சாதாரணமாக பார்த்து விட்டு செல்கிறார்கள். ஆனால் நீங்கள் அப்படி செய்து விடாதீர்கள். பாபா மனம் லயித்த அந்த இடம் நிச்சயம், அவருக்குள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாகும். எனவே உங்கள் வேண்டுதல்களை மறக்காமல் நந்தா தீபத்தை வணங்கி வையுங்கள். நிச்சயம் பாபா அருள் புரிவார்.

    சமீப காலமாக லெண்டித் தோட்டத்தில் ஏராளமான மலர்ச் செடிகள் வளர்த்து கண்ணுக்கு குளிர்ச்சியான நந்தவனமாக மாற்றியுள்ளனர். பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக ஆங்காங்கே இருக்கைகளும் போட்டுள்ளனர். அந்த இருக்கைகளில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். அந்த சமயத்தில் லெண்டித் தோட்டத்தின் பெருமையையும், சிறப்பையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். பாபா பற்றி உணர அது உதவியாக இருக்கும்.

    பாபா முதன் முதலாக 16 வயது இளைஞனாக சீரடிக்கு வந்த போது ஒரு வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து உலகுக்குக் காட்சியளித்தார். அந்த வேப்பமரம் ‘‘மர்கோசா’’ என்று அழைக்கப்படுகிறது. அந்த வேப்ப மரத்தடி நிலவறையில் தமது குரு இருந்ததாக பாபா கூறினார். இதனால் அந்த வேப்பமரம் பகுதி ‘‘குருஸ்தான்’’ என்று புகழப்படுகிறது.



    சீரடியில் பாபா அமர்ந்த இடங்கள் புனித பகுதியாக மாறிய போது குருஸ்தானும் புனித இடமாக மாறியது. பாபா பக்தர்கள் அங்கு ஊதுவத்திகளை ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள்.

    குருஸ்தானில் சிறு மாடம் கட்டப்பட்டு, அதனுள் பாபா படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பாபா ஆசியுடன் வைக்கப்பட்டதாகும். குருஸ்தானில் உள்ள வேப்ப மரத்தின் இலைகளையும் பக்தர்கள் புனிதமாக கருதுகிறார்கள். அந்த வேப்ப மரத்து இலைகளை சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள். சிலர் அந்த வேம்பு இலைகளை தங்கள் பர்சில் வைத்துக் கொள்கிறார்கள்.

    இந்த வேப்ப இலைக்காக பக்தர்கள் மரத்தை சுற்றி சுற்றி வருவதுண்டு. இதையடுத்து அந்த வேப்ப மரத்தை பாதுகாப்பதற்காக சுற்றி இரும்பு கம்பி வளையம் அமைத்துள்ளனர்.

    பாபா, மசூதியில் இருந்து தினமும் லெண்டி தோட்டத்துக்கு செல்லும் போது, குருஸ்தானில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். குருஸ்தானில் பாபாவின் பாதுகையும் இடம் பெற்றுள்ளது. இந்த பாதுகையும் பாபாவிடம் காண்பித்து, ஒப்புதல் பெறப்பட்டு, அவர் ஆசியுடன் வைக்கப்பட்டதாகும்.

    லிங்கம் ஒன்றும் குருஸ்தானில் இருக்கிறது. இந்த லிங்கம் தனது பக்தர்களில் ஒருவரான மேகா என்பவருக்கு பாபா பரிசாக கொடுத்ததாகும். மேகா அந்த லிங்கத்தை குருஸ்தானில் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். குரு ஸ்தான் பற்றி சாய்பாபா ஒரு தடவை கூறுகையில், ‘‘இனிப்பு வேப்ப மரத்தடியில் இருக்கும் என்னுடைய குருவின் சமாதியான இவ்விடத்தில் (குருஸ்தான்) மணப்புகை வீசும் தூபம் ஏற்றி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில், இவ்விடத்தை பசுஞ்சாணியைக் கொண்டு மெழுகி வழிபடுபவர்கள் இறைவனின் சங்கமத்தின் பேரானந்தத்தைப் பெறுவார்கள்’’ என்று கூறினார்.

    பாபா கூறியதற்கு ஆரம்ப காலத்தில் அங்கு பக்தர்கள் பசுஞ்சாணியை மெழுகி வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால் குருஸ்தானில் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது. என்றாலும் பாபா உத்தரவுக்கு ஏற்ப குருஸ்தான் நல்ல முறை யில் பராமரித்து பாது காக்கப்பட்டு வருகிறது.

    சாய்பாபாவின் ஆல யங்கள் தோறும் வழி பாட்டுக்காக அவரது பாது கையை வைத்துள்ளனர். ஆனால் பாபாவின் முதல் பாதுகை எங்கு, எப்படி உருவானது தெரியுமா? அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது. 1912-ம் ஆண்டின் தொடக்கத்தில்... பாபாவை இந்த உலகமே கண் கண்ட தெய்வமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம் அது. பாபா சீரடிக்கு வந்ததும் முதன் முதலில் அமர்ந்த வேப்ப மரத்தடியில் ஏதாவது ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களிடம் ஏற்பட்டிருந்தது.



    இது தொடர்பாக பக்தர்கள் கூடிப் பேசினார்கள். அப்போது பாபாவின் பாதுகைகளை பளிங்கு கல்லில் செதுக்கி வேப்ப மரத்தடியில் நினைவுச் சின்னமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். பாபாவின் பக்தர்களில் ஒருவரான கோத்தாரே என்பவர் அந்த பாதுகைகளை வடிவமைத்தார்.

    அந்த பாதுகை மாதிரியை பாபாவின் சீடர் போல செயல்பட்டு வந்த உபாசினியிடம் காட்டினார்கள். உபாசினி அதில் சில சிறு மாற்றங்களைச் செய்தார். பாதுகை அருகில் தாமரை, சங்கு, மலர்கள் இடம் பெற வேண்டும் என்று திருத்தம் செய்து கொடுத்தார். மேலும் சாய்பாபாவின் தனி சிறப்பையும், அவரது யோக சக்தியை உணர்த்தும் வகையில் சுலோகம் ஒன்றும் அந்த பாதுகை அருகில் இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி பளிங்கு கல்லில் பாதுகையை தயார் செய்யும் பணி மும்பையில் நடந்தது. பாதுகை தயாரானதும் அதை சீரடிக்கு கொண்டு வந்தனர்.

    பாபாவிடம் எடுத்துச் சென்று காண்பித்தனர். அந்த பாதுகைகளை பாபா தொட்டு ஆசீர்வதித்தார். பிறகு அவர் கூறுகையில், ‘‘இவை இறைவனுடைய திருவடிகள், குரு பூர்ணிமா தினத்தன்று வேப்ப மரத்தடியில் இந்த பாதுகையை பிர திஷ்டை செய்யுங்கள்’’ என்று கூறினார்.

    பாபா அருளியபடி 1912-ம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று இதற்கான விழா நடந்தது. பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான தீட்சித் அந்த பாதுகையை கண்டோபா ஆலயத்தில் இருந்து தன் தலையில் சுமந்தபடி எடுத்து சீரடி ஊருக்குள் வந்தார். பிறகு குருஸ்தானில் உள்ள வேப்ப மரத்தடியில் அந்த பாதுகை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அந்த பாதுகை பாபா பக்தர்களிடையே அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மசூதிக்கு சென்று பாபாவை வணங்கிய பிறகு வேப்ப மரத்தடிக்கு வந்து பாதுகை அருகில் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட தொடங்கினார்கள். அதோடு பாதுகைகளுக்கு ஐதீகப்படி பூஜைகளும் நடந்தன. தற்போதும் அங்கு பாதுகை பூஜை நடந்து வருகிறது. சீரடிக்கு செல்லும் போது நீங்களும் மறக்காமல் அந்த பாதுகையைப் பார்த்து வணங்கி வாருங்கள். அந்த பாத தரிசனம் நிச்சயம் நம் பாவங்கள் அனைத்தையும் போக்கும்.

    இந்த தரிசனம் முடிந்ததும், ஆலய வளாகத்துக்குள் இருக்கும் சாய்பாபா மியூசியத்தையும் அவசியம் பாருங்கள். பாபா பற்றி மேலும் உணர அது துணை நிற்கும். அந்த மியூசியம் பற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    Next Story
    ×