search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் அம்மன் கோவில்களில் களை கட்டிய ஆடித்திருவிழா
    X

    சேலம் அம்மன் கோவில்களில் களை கட்டிய ஆடித்திருவிழா

    தற்போது சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
    ஆடி மாதம் வந்தாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டுவது வழக்கம். சேலம் மாநகரில் நடைபெறும் மிகப்பெரிய விழாவில் ஒன்று ஆடித்திருவிழா. அதன்படி தற்போது சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் என்பதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    ஆடித்திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், வருகிற 15-ந் தேதி பால்குட விழாவும், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இதேபோல், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புது மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்பட மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பொங்கல் வைப்பதும், ஆடு, கோழிகளை பலியிடுவதையும், அலகு குத்தி ஊர்வலமாக செல்வதையும் காணமுடிகிறது.

    அதேபோல், சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) மாலை வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலிலும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சேலத்தில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியானது தமிழக அளவில் பிரபலம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×