search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

    சேலத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி மாமாங்கம் செயற்கை நீரூற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    சேலத்தில் ஆடி மாதத்தில் எல்லா அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி வெள்ளி மற்றும் ஆடி 18 என ஆடி மாதம் முழுவதும் பல்வேறு விசேஷங்கள் வரும். தமிழகம் முழுவதும் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

    சேலம் மாநகரில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சாமிக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    சேலம் செரி ரோட்டில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் காலையில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். அம்மன் துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரிசிபாளையம் நாராயணசாமிபுரத்தில் உள்ள ஓம்சக்தி காளியம்மனுக்கு ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை பலபட்டரை மாரியம்மன், மற்றும் சஞ்சீவராயன்பேட்டை உள்ளிட்ட நகரில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    சேலம் உடையாப்பட்டியில் கந்தாஸ்ரமம் கோவிலில் உள்ள முருகன், துர்கா பரமேஸ்வரி ஆகிய சன்னதிகளில் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் அய்யந்திருமாளிகை ஆலங்கொட்டை பூட்டு முனியப்பன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பூட்டு முனியப்பனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக கடந்த ஆடி 1-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட பூட்டு முனியப்பன் பஞ்சலோக சிலை அலங்கரிக்கப்பட்டு, அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவிலில் இருந்து பூட்டு முனியப்பன் கோவில் நோக்கி பவனி வந்தது. அதற்கு முன்னால் மேளதாளம் முழங்க பக்தர்கள் பல்வேறு சாமிவேடம் அணிந்தும், அலகு குத்தியும் வந்தனர். கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து ஆத்துகாடு, ஜல்லிக்காடு, கோரிமேடு, கள்ளிக்காடு, கம்பர் தெரு, வீட்டுவசதி வாரியம், ராமசாமிநகர், ராமநாதபுரம், சின்னதிருப்பதி, கன்னங்குறிச்சி, பெரிய கொல்லப்பட்டி, பள்ளக்காடு, மணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக வந்திருந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டும், பெண்கள் பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

    சேலம் குகை மாரியம்மன், மற்றும் காளியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகங்கள், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே திரளான பெண்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    அதேபோல் ஆடி 18-ஐ முன்னிட்டு சேலம் மாமாங்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து சாமியை கொண்டு வந்து சுத்தம் செய்தனர். பின்னர், அனைத்து சாமி சிலைகளுக்கும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பக்தர்கள் மாமாங்கம் செயற்கை நீரூற்றில் புனித நீராடினார்கள். அங்குள்ள ஊற்றுகிணறு முனியப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஜாகீர் அம்மாபாளையம், காமநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, பழையூர், செங்கானூர், கொல்லப்பட்டி, திருமலைகிரி, சோளம்பள்ளம், குள்ளகவுண்டனூர், சூரமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து புனித நீராடினார்கள்.

    இதே போல் சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்திலும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கு ஏற்ப மூலவருக்கு நவதானியத்தால் தயாரித்த ஆடை சாத்தப்பட்டு ‘நவதானிய நாயகன்‘ ஆக அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து காவடி புறப்பாடு நிகழ்ச்சியும், மகாதீபாராதனை, விசேஷ பூஜை, அருள்வாக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தங்கரதம் புறப்பாடும் நடந்தது.
    Next Story
    ×