search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடிப்பெருக்கில்... காவிரி நீர் அபிஷேகம்
    X

    ஆடிப்பெருக்கில்... காவிரி நீர் அபிஷேகம்

    காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!
    நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம்-ஸ்ரீஅசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

    இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    பூக்கள் நிரப்பும் விழா :


    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப் படுகிறது.

    காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்! ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    கல்வியில் ஜொலிப்பார்கள்:

    ஆடி மாதம் பௌர்ணமி தினமும் விசேஷமானதுதான். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    துளசியை வழிபடுங்கள்...

    ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துனமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் பெண்களின் சாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    Next Story
    ×