search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காவிரிக்கு மகாவிஷ்ணு கொடுத்த 3 வரங்கள்
    X

    காவிரிக்கு மகாவிஷ்ணு கொடுத்த 3 வரங்கள்

    கங்கை, காவிரி 2 பேருக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டி பற்றியும், காவிரிக்கு மகாவிஷ்ணு கொடுத்த 3 வரங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
    கங்கை, காவிரி 2 பேருக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டி இருந்தது. அவர்கள் இருவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் திருமுடியில் இருந்து கங்கை பூமிக்கு வந்ததாலும், வாமன அவதாரத்தின் போது திருமாலின் காலில் பட்டு சென்றதாலும் கங்கை தான் உயர்ந்தவர் என்று பிரம்மா கூறினார். இதைத்தொடர்ந்து காவிரி, பிரம்மாவிடம் தென்நாட்டில் நான் தான் உயர்ந்தவள் என்று சொல்லப்பட வேண்டும்.

    அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு பிரம்மா 108 வைணவ தலங்களில் 15-வது தலமான திருச்சேறை சென்று காவிரியை தவம் இருக்க சொன்னார். அதன்படி காவிரி திருச்சேறைக்கு வந்து சாரநாத பெருமாள் கோவிலுக்கு எதிர்புறம் உள்ள திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில் 3 ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தாள்.

    அதைத்தொடர்ந்து மகாவிஷ்ணு குழந்தையாக காவிரித்தாய் மடியில் தவழ்ந்து அவரது தவத்தை மெச்சி 3 வரங்களை தருகிறேன் கேள் என்றார். காவிரியும் மனம் மகிழ்ந்து பெருமானே, இங்கு குழந்தையாக காட்சி கொடுத்த நீங்கள் வைகுண்டத்தில் பஞ்ச லட்சுமிகளுடன் காட்சி அளிப்பதை போல் பெரிய உருவத்தில் காட்சி கொடுக்கவேண்டும். கங்கையை காட்டிலும் காவிரி தென்நாட்டில் உயர்ந்தவள் என்ற சிறப்பை வழங்க வேண்டும்.

    வழிபடுவோர் மனதில் நினைத்ததை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றாள். மகா விஷ்ணுவும் இந்த 3 வரங்களையும் கொடுத்ததாக தல புராணம் கூறுகிறது. மகாவிஷ்ணு வரம் கொடுத்த நாள் தை மாதம் பூச நட்சத்திரம் வியாழக்கிழமை பவுர்ணமி திதியாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். மேலும் இங்கு ஒவ்வொரு தை மாதமும் பூச நட்சத்திரத்தன்று திருவிழா நடைபெற்று காவிரி தாய்க்கு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் நாச்சியார் கோவில் அருகே திருச்சேறை உள்ளது. இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டும் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி ஆகிய 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார்.
    Next Story
    ×