search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபாவின் இருப்பிடமாக இருந்த துவாரகாமாயி
    X

    சாய்பாபாவின் இருப்பிடமாக இருந்த துவாரகாமாயி

    துவாரகாமாயி எனும் மசூதி தான் சுமார் 60 ஆண்டு காலமாக சாய்பாபாவின் இருப்பிடமாக இருந்தது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    சாய்பாபா சீரடியில் வாழ்ந்தார் என்பது தான் எல்லாருக்கும் தெரியும். சீரடியில் அவர் எங்கு வசித்தார் தெரியுமா?

    துவாரகாமாயி எனும் மசூதி தான் சுமார் 60 ஆண்டு காலமாக சாய்பாபாவின் இருப்பிடமாக இருந்தது. சாய்பாபா சீரடியில் நிரந்தரமாக தங்கி விட முடிவு செய்தபோது முதலில் ஊர் எல்லையில் உள்ள கண்டோபா ஆலயத்துக்கு சென்றார்.

    அந்த கோவில் பூசாரியாக இருந்த மகல்சாபதி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் பாபா, சீரடி மையப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தடிக்கு சென்று தங்கினார். அவர் மகிமை பற்றி தெரிய தொடங்கிய நிலையில் ஒரு நாள் சீரடியில் பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் அதே இடத்தில் இருந்த பாபாவை எல்லாரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக துவாரகாமாயி மசூதியில் தங்குவதற்கு அழைத்து சென்றனர்.

    அந்த சமயத்தில் அந்த மசூதி மிகவும் இடிந்து, தகர்ந்து பழுதுபட்ட நிலையில் இருந்தது. நிறைய பக்தர்கள் மசூதியை செப்பனிட்டுத் தர முன் வந்தனர். அதை ஏற்காத பாபா தானே அதை சீரமைத்து, தினமும் துவாரகாமாயியில் விளக்குகள் ஏற்றி ஜொலிக்க செய்தார்.பாபா, அந்த மசூதியின் உள்ளே இடது பக்க நேர் ஓரத்தில் அமர்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு இருந்தபடி அவர் இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். இதனால் பாபாவை நம்பிய மக்களுக்கு துவாரகாமாயி தலம், கலங்கரை விளக்காக மாறியது.

    மன சஞ்சலத்துடன் வந்த ஒவ்வொருவரும் துவார காமாயியில் காலடி எடுத்து வைத்த மறுநிமிடமே, தங்கள் மன பாரம் நீங்கி விட்ட உணர்வை பெற்றனர்.
    சாய்பாபா தன் கடைசி மூச்சை துவாரகாமாயியில் தான் விட்டார். எனவே சாய்பாபாவின் அருள் நிரம்பப் பெற்றதாக துவாரகாமாயி கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துவாரகாமாயிக்கு நீங்கள் அவசியம் ஒரு தடவையாவது நேரில் சென்று தரிசித்து பலன் பெற வேண்டும். சமாதி மந்திரை ஒட்டி யபடி அருகிலேயே துவாரகாமாயி உள்ளது. பாபா காலத்தில் துவாரகாமாயி மசூதி 24 மணி நேரமும் திறந்தே இருந்தது. எல்லா மதத்தினரும் அதற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது பாதுகாப்பு கருதி மூடப்படுகிறது.

    அதிகாலை 4 மணிக் கெல்லாம் துவாரகாமாயியை திறந்து விடுவார் கள். இரவு 9.30 மணி வரை அங்கு சென்று வழிபடலாம். துவாரகாமாயிக்குள் நீங்கள் நுழைந்ததும் இடது பக்க வழியாக உங்களை செல்ல சொல்வார்கள். அங்குதான் தூனி எனும் நெருப்புக் குண்டம் உள்ளது. இந்த நெருப்பு சாய் பாபாவால் ஏற்றி வைக்கப் பட்டது. பல ஆண்டுகளை கடந்து அந்த நெருப்புக் குண்டம் இரவு-பகலாக இப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

    இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது. சாய்பாபா சுக்கா எனும் மண்குழல் மூலம் புகை பிடிப்பார். அதற்கு நெருப்பு தேவைப்படும் போதெல்லாம் பாபாவின் பக்தர்கள் வெளியில் சென்று வாங்கி வருவார்கள். ஒருதடவை மகல்சாபதி “பாபா... நெருப்பு பெறுவதற்காக அடிக்கடி வெளியில் செல்வது சிரமமாக உள்ளது. எனவே இங்கேயே நிரந்தரமாக நெருப்பு இருக்கும்படி செய்யுங்கள்” என்றார். உடனே பாபா, “நிரந்தரமாகத்தானே..... செய்து விடலாம்” என்று கூறி தன் கையில் இருந்த குச்சியால் தரையில் தட்டினார். உடனே அங்கிருந்து நெருப்பு பீறிட்டு வந்து எரிந்தது.

    அதில் மட்டை தேங்காய், மரக்கட்டைகள் மற்றும் நறுமணப் பொருட்களை எரித்தனர். இதன் மூலம் கிடைத்த சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது.
    உதி பற்றி பாபா கூறுகையில், “இந்த நெருப்பில் இருந்து வரும் சாம்பல், என் சக்திகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டது. இதற்காகவே சீரடியில் அக்னி பகவான் நிரந்தரமாக குடியேறி விட்டார். எனவே இதை அருள்பிரசாதமாக பயன்படுத்துங்கள்” என்றார்.

    அந்த உதியை பாபா, தன் பக்தர்களுக்கு திருநீறாக கொடுத்தார். இத்தகைய சிறப்புமிக்க நெருப்பு குண்டம் தற்போது தகரத்தால் சுற்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. நாம் அதை தொட்டு வணங்கலாம். வாழ்க்கையில் இந்த காரியம் நடக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டு நெருப்புக் குண்டத்துக்கு பூஜைகள் செய்யும் நடைமுறை முன்பு வழக்கத்தில் இருந்தது. இதற்கான பூஜை பொருட்கள் மசூதிக்கு வெளியிலேயே விற்பனை செய்யப்பட்டன. ஆனால் தற்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை வரத் தொடங்கி விட்டதால் துனி பூஜை சிரமத்தை தருவதாக கூறி நிறுத்தி விட்டனர்.



    அந்த நெருப்பு குண்டம் அருகிலேயே சுவரில் இளம்பிறை ஒன்று உள்ளது. பாபா அதை மிம்பார் என்று அழைத்தார். அதற்கு தினமும் பாபா பூ போட்டு பூஜித்து வணங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதை நினைவு கூறும் வகையில் இப்போதும் மிம்பாருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. பாபா வாழ்ந்த காலத்தில் அங்கு ஒரு துளசி மாடம் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால் இப்போது துளசி மாடம் எதுவும் இல்லை.

    துவாரகாமாயியில் சில படிக்கட்டுகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதில் தினமும் வரிசையாக விளக்குகள் ஏற்றி வைப்பதை பாபா வழக்கத்தில் வைத்திருந்தார். அந்த அறைக்குள் நெருப்புக்குண்டத்துக்கு எதிராக ஒரு கண்ணாடி பெட்டிக்குள் ஒரு மூடை கோதுமையும், சக்கி என்று கூறப்படும் ஒரு அரவைக்கல்லும் உள்ளது. அந்த அரவை கல்லில் தான் பாபா கோதுமையை அரைத்து மாவாக்கி, அந்த மாவை சீரடி நகரில் 4 திசைகளிலும் தூவச் செய்தார்.

    இதன் மூலம் சீரடியில் பரவிய காலரா கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பாபா கெட்ட சக்திகளை அரவை கல்லில் அரைத்து இருப்பது தெரிந்தது. இத்தகைய சிறப்புடைய அரவைக் கல்லை அங்கு காணலாம். பாபா கோதுமை அரைத்ததை அறிந்த சீரடியைச் சேர்ந்த பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் தன் வயலில் விளைந்த கோதுமையில் இருந்து ஒரு மூடை கோதுமையை பாபாவுக்கு கொடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் ஒரு மூடை கோதுமையை பாபாவுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

    அதன் நினைவாக ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று புதிதாக ஒரு மூடை கோதுமை வாங்கி அதனை துவாரகாமாயியில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து வருகிறார்கள். இந்த கோதுமை மூடை அருகில் ஒரு மண் பானை இருக்கிறது. அந்த பானை பாபா பயன்படுத்தியதாகும். லென்டி தோட்டத்தில்தான் உருவாக்கிய ஷிவடி எனும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அந்த பானையில் பாபா ஊற்றி வைப்பார். அவரைப் பார்க்க வரும் பக்தர்கள், அந்த பானையில் உள்ள தண்ணீரை “பாபாவின் தீர்த்தம்“ என்று பருகி செல்வார்கள்.

    இப்போதும் அந்த பானையில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. விபரம் தெரிந்த பக்தர்கள் அந்த பானைத் தண்ணீரை குடிக்கத் தவறுவதில்லை. அந்த பானைத் தீர்த்தம் தங்களது கிரக தோஷங்களை விரட்டும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அடுத்த தடவை சீரடி செல்லும்போது, துவாரகாமாயிக்குள் இருக்கும் பானையில் உள்ள தண்ணீரை குடிக்க முயற்சி செய்யுங்கள்.

    துவாரகாமாயி கூடத்தில் பாபா பயன்படுத்திய ஒரு அடுப்பும் வைக்கப்பட்டுள்ளது. அந்த அடுப்பில் யார் உதவியும் இல்லாமல் பாபா தானே சமைத்து, ஏழை-எளியவர்களுக்கு உணவை அளித்தார். பாபா பயன்படுத்திய இந்த அடுப்பை பயன்படுத்தினால் வீட்டில் உணவுக்கு பஞ்சம் வராது என்பது ஐதீகமாக உள்ளது.

    அந்த அடுப்புக்கு அருகில் பாபா சாய்ந்து கொள்ள பயன்படுத்திய மரத்தூண் வைக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் பக்தர்களும் அதில் சாய்ந்து உட்கார்ந்து பார்ப்பதுண்டு. மரத்தூணில் சாய்ந்து உட்கார்ந்தால் உடல் வலிகள் தீருவதாக தகவல் பரவியதால் பக்தர்கள் அந்த தூண் மீது அதிக அளவில் சாய்ந்தனர்.
    இதையடுத்து அந்த தூணை பாதுகாப்பதற்காக தற்போது அதில் பக்தர்கள் சாய அனுமதிக்கப்ப டுவதில்லை. மேலும் அந்த மரத்தூணை சுற்றி தடுப்பு அமைத்துள்ளனர். எனவே அந்த தூணை தரிசிக்க தவறாதீர்கள்.

    துவாரகாமாயியில் அமர்ந்த நிலையில் பாபாவின் வரை படம் ஒன்று உள் ளது. சந்தனம் பூசி மாலையிட்டு வைக்கப்பட்டிருக்கும் அந்த வரை படம் தத்ரூபமானது. பாபாவின் பக்தரான புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் ஷாமராவ் ஜெயகர் அந்த படத்தை வரைந் திருந்தார். பிறகு அதை பாபாவிடம் காண்பித்து ஆசி பெற சென்றார். அந்த ஓவியத்தை தன் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஓவியர் ஷாமராவ் நினைத்திருந்தார்.



    ஆனால் பாபாவின் உத்தரவு வேறு விதமாக இருந்தது. “நான் தான் எப் போதும் உன்னுடன் தானே இருக்கிறேன். அழகான இந்த படம் இங்கேயே இருக் கட்டும்” என்றார். ஓவியர் ஷாமாரா வால் பாபா உத்தரவை மீற முடியவில்லை. இதன் காரணமாக அந்த அரிய படம் இன்னமும் துவார காமாயிக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது.

    பாபா எந்த இடத்தில் அமர்ந்து ஆசி வழங்கினாரோ, அந்த இடத்தில் அந்த அரிய படம் இன்னமும் துவாரகாமாயிக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது.

    எனவே அந்த இடத்தில் மனம் உருக வேண்டிக் கொள்ளுங்கள். பாபா உயிருடன் இருந்தவரை சீரடி செல்பவர்கள், ஊர் திரும்ப அவரிடம் அனுமதி பெறுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவர் மகாசமாதி அடைந்த பிறகு இந்த படம் முன்பு நின்று ஊர் திரும்ப பக்தர்கள் அனுமதி கேட்பது வழக்கத்தில் உள்ளது.

    இதையடுத்து வலது புறமாக சுற்றி வந்தால் ஒரு புலி மற்றும் ஒரு குதிரை சிலைகள் இருப்பதை காணலாம். அதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது.

    பாபா மகாசமாதி அடைவதற்கு ஏழு தினங்களுக்கு முன்பு சர்க்கஸ் புலி ஒன்று அவரிடம் அழைத்து வரப்பட்டது. நோயுடன் காணப்பட்ட வயதான அந்த புலி பாபா முன் மண்டியிட்டது. வாலை மூன்று முறை தரையில் அடித்த அந்த புலி அப்படியே உயிர் துறந்தது. பாபா முன்னிலையில் அது முக்தி பெற்றதாக கருதப்படுகிறது. அந்த புலி சிலை அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    பாபாவுக்கு ஒரு தடவை, வியாபாரி ஒருவர் குதிரை குட்டி ஒன்றை அன்புப்பரிசாக கொடுத்தார். சியாம் சுந்தர் என்று பெயர் சூட்டி அதை பாபா மிகவும் வாஞ்சையுடன் வளர்த்து வந்தார். துவாரகாமாயியில் வழிபாடுகள் முடிந்ததும் அந்த குதிரைக்குத்தான் முதலில் உதியை பாபா பூசி விடுவார். அந்த அளவுக்கு பாபா மனதில் அந்த குதிரை இடம் பெற்றிருந்தது. பாபா இவ்வுலகை விட்டு நீங்கிய பிறகு1945-ம் ஆண்டு வரை அந்த குதிரை உயிருடன் இருந்தது.

    வியாழன் தோறும் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு பாபா படத்தை இந்த குதிரை முதுகில் வைத்துதான் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதை நினைவுபடுத்தும் வகையில் பாலாசாகப் என்ற பக்தர் செய்து கொடுத்த குதிரை சிலை துவாரகாமாயியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கண்டோபா ஆலயத்தில் பாபா வணங்கிய தெய்வ சிலைகளின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து பாபா அமர்ந்த சிறிய கருங்கல் பாறை கண்ணாடி பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாபா அமர்ந்து குளிப்பதற்காக ஒரு பக்தரால் அந்த கல் பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் பாபா ஒருநாள் கூட அதில் அமர்ந்து குளித்தது இல்லை. என்றாலும் பெரும்பாலான நேரங்களில் பாபா அந்த கல்லில் அமர்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    பாபா பயன்படுத்திய பொருட்களில் இது பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. இந்த கல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி மீது பாபாவின் பாத வடிவம் உள்ளது.
    அதில் மலர் வைத்து வழிபாடு செய்யும் போது பாபாவின் காலடியில் நாம் விழுந்து வணங்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அந்த தரிசனம் முடிந்ததும் அருகில் இருக்கும் உதியை எடுத்து பூசிக் கொள்ள தவறாதீர்கள். பிறகு துவாரகாமாயிக்குள் நடு கூடத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யலாம்.

    துவாரகாமாயியில் உள்ள தெற்கு பக்க படிக் கட்டுக்கள் வழியாகத் தான் பாபா வெளியில் சென்று வருவார். பாபாவின் பாதம்பட்ட அந்த படிக் கட்டுக்களை தொட்டு வணங்கி வழிபட மறக் காதீர்கள்.

    துவாரகாமாயி தரிசனம் முடிந்ததும் அடுத்து நாம் செல்ல வேண்டிய இடம் சாவடி. இதுவும் பாபா தங்கியிருந்த இடமாகும். இதுபற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×