search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பதினாறு பேறுகளை தந்தருளும் லட்சுமி பாதங்கள்
    X

    பதினாறு பேறுகளை தந்தருளும் லட்சுமி பாதங்கள்

    இறைவனது திருவடிகளை தமது இதயத்தில் வைத்து போற்றக்கூடிய அருளாளர்களின் திருவடி, இறைவனை விடவும் பெருமை பெற்றது என்பதும் ஆன்மிக உலகில் பரவலான நம்பிக்கையாக உள்ளது.
    ஆன்மிக உலகில் மறைபொருளாக இருக்கும் பல விஷயங்களில் திருவடி எனப்படும் ‘ஸ்ரீபாத’ வழிபாடும் ஒன்று. இறைவனை விடவும் அவனது நாமமும், அவனது திருவடியும் மகிமை பெற்றவை என்பது ஆன்றோர்களின் வாக்கு. அதேபோல் இறைவனது திருவடிகளை தமது இதயத்தில் வைத்து போற்றக்கூடிய அருளாளர்களின் திருவடி, இறைவனை விடவும் பெருமை பெற்றது என்பதும் ஆன்மிக உலகில் பரவலான நம்பிக்கையாக உள்ளது. அதாவது திருவடிகளுக்கு உள்ள மதிப்பானது ஆன்மிக வாழ்வு மற்றும் உலகியல் வாழ்வு ஆகிய இரண்டு நிலைகளிலும் பெருமளவு முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது.

    இறைவன், இறைவி, குரு, தாய்-தந்தையர் ஆகியோர்களது திருவடிகளை, பாதுகைகள் எனப்படும் திருவடிகள் மூலம் வழிபடுவது ஒருவகை ஆன்ம ஞான மரபாக இருந்து வருகிறது. நமது நாட்டில் பல பாகங்களிலும் இறைவனது திருவடியை வணங்குவது காலம் காலமாக இருந்து வருகிறது.

    பல்வேறு சம்பிரதாயங்கள் :

    சமண மதத்தில் தங்களது குருவின் திருவடிகளை வைத்தும், பவுத்த மதத்தில் புத்தரின் திருவடி பதித்த பீடத்தை ‘பாத பீடிகை’ என்ற பெயருடனும், வைணவ சம்பிரதாயத்தில் நெற்றியில் இடும் நாமமானது மஹாவிஷ்ணுவின் பாதம் என்றும் வழங்கப்பட்டு வரு கிறது. இறைவனது திருவடியை, குருவின் திருவடியாக போற்றுவதும் வைணவ சம்பிரதாய வழக்கமாக இருக்கிறது.

    வைணவ கோவில்களில் பக்தர்கள் தலைமேல் சடாரி வைப்பது என்பது திருவடியின் ஆசியாக கருதப்படுகிறது. வேதாந்த தேசிகர் என்ற வைணவ ஆச்சாரியர் இறைவனது திருவடிகளை புகழும் ஆயிரம் பாடல்கள் கொண்ட ‘பாதுகா சகஸ்ரம்’ என்ற ஒரு நூலையே தந்திருக்கிறார். குருவாயூர் கிருஷ்ணனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்ரி, துர்க்கையின் பாதார விந்தங்களை ‘ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற 70 ஸ்லோகங்களாக பாடி, பிரார்த்தனை செய்து அப்பொழுதே முக்தியை பெற்றதாக ஆன்மிக தகவல் உண்டு.

    வடமாநில தீபாவளி பூஜை :

    இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளியை ஒட்டி லட்சுமி பூஜை செய்யப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். தீபாவளியன்று லட்சுமி வழிபாடு எப்படி வந்தது? என்று ஒரு புராண கதை உண்டு. அதாவது, ஒரு முறை மகாலட்சுமியை, மகாபலி சக்ரவர்த்தி சிறை பிடித்து, தனது நாட்டுக்கு எடுத்து சென்றதால், அவனது நாடு, நகரம் அனைத்திலும் செல்வம் பெருகியது.

    அதனால் மகாலட்சுமியை அவன் விடுதலை செய்ய மனமில்லாமல் இருந்தான். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவனை அழித்த போது லட்சுமி சிறையிலிருந்து மீண்டதாக சொல்கிறது புராணம். அதனால் தீபாவளி சமயங்களில் வட மாநிலங்களில் லட்சுமி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிறிய அளவில் மஞ்சள் அல்லது அரிசி மாவு கொண்டு மகாலட்சுமியின் பாதங்கள், வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரையிலும் அழகான முறையில் வரையப்படுகிறது.

    அதை மேலும் அலங்கரிக்கும்படி விதவிதமான ரங்கோலி வகை கோலங்களும் போடப்படும். பூஜையின்போது மகாலட்சுமிக்கு தங்க நகை அலங்காரம் செய்யப்பட்டு, மந்திரங்கள் உச்சரிக்கப்படும். அந்த பூஜையானது, அன்றைய தினத்தில் எவ்விதமான குறையும் இல்லாமல் நடந்துவிட்டால், வருடம் முழுவதும் தங்கள் வீட்டில் ஐஸ்வரியம் தங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பூஜை சமயங்களில் தாமரை தண்டு திரியிட்ட தீபம் ஏற்றுவதும், கோ பூஜை செய்வதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத்தருவதாக ஐதீகம்.
    Next Story
    ×