search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி மாதம் வேப்பிலைக்காரி வழிபாடு
    X

    ஆடி மாதம் வேப்பிலைக்காரி வழிபாடு

    அம்மனை பெண்கள் மிகவும் செல்லமாகவும், அன்பாகவும் “வேப்பிலைக்காரி” என்று அழைப்பார்கள். ஆடியில் அம்மன் தலங்களில் வேப்பிலையின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
    அம்மனை பெண்கள் மிகவும் செல்லமாகவும், அன்பாகவும் “வேப்பிலைக்காரி” என்று அழைப்பார்கள். அன்னை ரேணுகா தேவி தீ கொப்பளத்தால் அவதிப்பட்ட போது வேப்பிலை அவளுக்கு குளிர்ச்சியைக் கொடுத்தது. அன்று முதல் அம்மனுடன் வேப்பிலை பிரிக்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஆடியில் அம்மன் தலங்களில் வேப்பிலையின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

    நம் நாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேப்பமரத்தை அழைக்கிறோம். பூலோகத்தைக் காத்து வரும் மாரியம்மனுக்கு இவ்வேம்பின் இலைகள் மிகவும் விருப்பமானது. வேப்ப மரம் சக்தியின் வடிவம் என்றும், அரச மரம் இறை வடிவம் என்றும் சொல்வார்கள்.

    வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

    நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும்.

    இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும் ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட மரமாக வேம்பு திகழ்கின்றது.

    வேப்பிலை நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது. இதை கருத்தில் கொண்டே குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

    இந்து மத வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. ஆலய வழிபாடுகள் எல்லாமே மனிதனுடைய உள்ளமும் உடலும் சுத்தமாகவும் நிர்மலமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டன.

    அவ்வழிபாடுகளில் விருட்ச வழிபாடுகள் தனித்துவம் பெறுகின்றன. அதுவும் ஆடிமாதம் தொடங்கியதும் சந்து பொந்துகளில் எல்லாம் வளர்ந்திருக்கும் வேப்பமரத்திற்கு மவுசு வந்து விடும். அதன் கீழ் ஏடுகளை வைத்தும், மூன்று செங்கற்களை நட்டும் பெண்கள் பூஜை செய்யத் தொடங்கி விடுவார்கள். இதற்கெல்லாம் விளக்கங்களும் சொல்லப்படுகின்றன.

    மூன்று கற்களை வைத்து வழிபட்டால் - முக்கன்னி தேவி கன்பூஜை.
    ஐந்து கற்களை நட்டு வழிபட்டால் - சிவசக்தி பூஜை.

    ஏழுகற்களை நட்டு வேம்பின் கீழ் வழிபட்டால் ஏழுகன்னியர் வழிபாடு.
    ஒன்பது செங்கற்களை வைத்த வழிபட்டால் அதற்கு நவசக்தி வழிபாடு என்று பெயர் பெறுகின்றன. வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கிறார்கள்.

    வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர். வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. எனவேதான் இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது.

    புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர். தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்ப நிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது.

    வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நமக்கு வரம் தரும் தெய்வ மரங்களை வளர்த்து வரங்கள் பெறலாமே! மாமரம் திருமகள் அருளைத் தேடித்தரும். வில்வமரம் வறுமையை விரட்டி வாழவைக்கும். வேப்ப மரத்தை வீட்டில் வளர்த்தால் தீரா நோய்களும் தீர்ந்து 120 ஆண்டுகள் நலமுடன் தீர்க்காயுள் உள்ள மனிதர்களாக வாழ முடியும்.

    வேப்ப மரத்தின் கீழ் ஏன் ஆடியில் பூஜை செய்கிறோம் என்றால், ஆடி மாதம் பிறந்த உடனேயே அந்த ஆதிபராசக்தி ஆசைப்பட்டு அதன் மேல் அமர்ந்து விடுகிறாள் என்பது ஐதீகம். எனவே, வேப்பமரம் பூஜையை ஆடி மாதம் முழுவதும் செய்து வந்தால் தேவியின் தரிசனத்தால் நமது வறுமை விலகி வளங்கள் கூடும்.

    மலை வேம்பை முறைப்படி கணவன்-மனைவி இருவரும் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். மாரித்தாயின் கடைக்கண் பார்வையும் திருவருளும் கிடைத்து வெற்றி அடைய தவறாமல் வேம்புவை வழிபடுவீர்களாக! வீட்டில் வேப்பமரம் இல்லாத பெண்கள், பொது இடம் ஆலயங்களில் உள்ளதைக் கண்டு வழிபாடு செய்யலாம்.
    Next Story
    ×