search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    சேத்தியாத்தோப்பு அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

    சேத்தியாத்தோப்பு அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழாநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    சேத்தியாத்தோப்பு அருகே கூ.தென்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 14-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சி, மகாபாரத சொற்பொழிவு, வில்வளைப்பு, தர்மர் பிறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டு மற்றும் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×