search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் அம்மனை வழிபட்டதையும் காணலாம்.
    X
    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் அம்மனை வழிபட்டதையும் காணலாம்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவ அம்மன் 5 தலை நாக வாகனத்தின் மீது கையில் சூலம் வைத்திருப்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டு, உட் பிரகாரத்தில் வைக்கப்பட்டார். பின்னர் இரவு 11.15 மணி அளவில் வடக்கு வாயில் வழியாக உற்சவ அம்மன், பம்பை- உடுக்கை மேளதாளங்கள் முழங்க, ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    அப்போது பூசாரிகள் பக்தி பாடல்களை பாடினர். இரவு 12 மணி அளவில் தாலாட்டு பாடல்களை பாடியவுடன் அம்மனுக்கு அர்ச்சனையும், அதைத்தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அங்காளம்மா தாயே... அருள் தருவாயே... என்று கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். பலர் தீபம் ஏந்தி வழிபட்டதையும் காணமுடிந்தது.

    விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×