search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவில்களில் ஜேஷ்டாபிஷேகம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவில்களில் ஜேஷ்டாபிஷேகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் உள்ளிட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவில்களில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஜேஷ்டாபிஷேகமும், மறுநாள்(சனிக்கிழமை) திருப்பாவாடை திருநாளும் நடைபெற உள்ளது. இதையொட்டி 28-ந்தேதி காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து பட்டர்கள் வெள்ளி குடம் எடுத்து சென்று 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து புறப்படுகிறார்கள். காலை 9.30 மணிக்கு திருமஞ்சன குடங்களை கோவிலில் இறக்குவார்கள். 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தலும் பகல் 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்படைத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். இதையொட்டி மாலை 5 மணி வரை பொது ஜன சேவை கிடையாது.

    29-ந்தேதி நடைபெறும் திருப்பாவாடை நிகழ்ச்சியில் காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகமும் நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்னொரு துணை கோவிலான லால்குடி தாலுகா அன்பிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி அன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அன்று காலை 7.30 மணிக்கு கோவிலில் இருந்து குடம் எடுத்து புறப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து 8 மணிக்கு திரும்புவார்கள். காலை 8.45 மணிக்கு திருமஞ்சன குடம் கோவிலை அடையும். 10.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளப்படும். பகல் 1 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் வருகிற 3-ந் தேதி அன்று ஜேஷ்டாபிஷேகமும், 4-ந்தேதியன்று திருப்பாவாடை திருநாளும் நடைபெறும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி பட்டர்கள் 3-ந்தேதி காலை 9 மணிக்கு தங்க குடம் எடுத்து குசஹஸ்திகரை மண்டபம் செல்வார்கள். 9.30 மணிக்கு தங்க குடத்தில் எடுக்கப்பட்ட புனித நீர் திருவீதி வலம் வந்து திருமஞ்சன குடங்கள் 11 மணிக்கு சன்னதியை அடையும். காலை 11.30 மணிக்கு பெருமாள், தாயார் அங்கில்கள் ஒப்புவித்தலும், இரவு 7.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.

    4-ந்தேதி காலை 6.45 மணிக்கு தளிகை எடுத்தலும், காலை 10 மணிக்கு திருப்பாவாடை அமுது செய்து மங்கள ஆரத்தி கண்டருளுதலும், காலை 10.15 மணிக்கு தீர்த்த கோஷ்டி மரியாதையும் நடைபெறும். 3-ந்தேதி நாள் முழுவதும், 4-ந்தேதி காலை 10.30 மணி வரையிலும் மூலஸ்தான சேவை கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×