search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடிஅமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்
    X

    ஆடிஅமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்

    ஆடி அமாவாசையை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கோவில் அமைந்துள்ள பகுதியில் குடில் அமைத்து ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காரையாறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) முதல் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அகஸ்தியர்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீயணைப்புத்துறை சார்பில், கோவிலில் ஒரு லாரி, மற்றும் காரையாறு அருகே 2 லாரிகள் என மொத்தம் 3 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ் வாகனமும், பிளாஸ்டிக் படகும் நிறுத்தப்பட்டுள்ளன.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் குடிநீர் வசதிக்காக காரையாறு ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து பக்தர்களுக்கு வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வைராவிகுளம் அரசு ஆஸ்பத்திரி சார்பில், 2 நடமாடும் மருத்துவக்குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் கோவிலில் நிறுத்தப்பட்டுள்ளன. வனத்துறை சார்பில், நெல்லை மாவட்ட தலைமை வனக்காவலர் வெங்கடேஷ் தலைமையில், வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 300 பேர் 3 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலில் 400 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை சார்பில், நெல்லை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாதவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உதயகுமார், கனகராஜ் மற்றும் ஆறுமுகம், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 483 போலீசார், 128 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    விக்கிரமசிங்கபுரம் மற்றும் மணிமுத்தாறு நகர பஞ்சாயத்துகள் மூலம் கோவில்களில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுத்தம் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×