search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடலை வருத்தி நேர்த்தி கடன் செலுத்துவது எதனால்?
    X

    உடலை வருத்தி நேர்த்தி கடன் செலுத்துவது எதனால்?

    நம் ஊர்களில், தலையில் தேங்காய் உடைப்பது, தீ மிதிப்பது, அலகு குத்துவது என தங்கள் உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது எதனால்? என்று பார்க்கலாம்.
    சத்குரு: இந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது.

    எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்தி மட்டுமே. முக்தியே அடிப்படையான குறிக்கோளாக இருப்பதால், உடல், மனம், சமூகம் போன்ற அனைத்தையும் குறிக்கோள் நிறைவேற உதவும் கருவிகளாகத்தான் முதலில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம்.

    நமக்கு இருக்கக்கூடிய முக்கியத் தடை, உடல் மீதுள்ள அடையாளம்தான். அந்த அடையாளத்தைத் தாண்டுவதற்கு மிகவும் சூட்சுமமான, மென்மையான தியானத்தில் இருந்து மிகவும் கடினமான ஆணிப் படுக்கை மேல் படுப்பது வரை ஆயிரம்விதமான கருவிகள் உருவாக்கினார்கள். ஆன்மீக முன்னேற்றத்துக்காகத் தேவையான கருவியை எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளும் சுதந்திரமும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

    நாளடைவில் இந்தக் கருவிகள் மக்களின் விருப்பங்களுக்கேற்ப புதுப்புது வடிவங்கள் எடுத்திருக்கலாம். எல்லாமே இன்றைக்கும் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. ஆனால், இது ஒரு கலாசாரமாக இருப்பதால் மக்களின் விருப்பங்களுக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இதுவே ஒரு மதமாக இருந்திருந்தால், இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணி அடித்திருப்பார்கள். ஆனால், பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் விருப்பங்களுக்கேற்ப அவ்வப்போது மாறி வருவதுதான் கலாசாரத்தின் அழகு.

    இந்தக் கலாசாரத்தில் அதற்கான முழுச் சுதந்திரம் இருந்தது. காலத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, மக்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இன்றே நீங்கள் வேறு ஒரு பழக்கத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். யாரும் உங்களைத் தடுக்கப்போவதில்லை. இந்த ஒரு கலாசாரத்தில் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு எது செய்யவேண்டும், எது செய்ய வேண்டாம் என்று சொல்லித்தரவில்லை.

    தற்போது இந்தக் கலாசாரத்தில் வழக்கத்தில் இருக்கும் பழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் காரணம், மனிதர்கள் அவற்றை இன்னும் விரும்புவதால்தான். அவை எல்லாவற்றையும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஆனால், மற்றவர்கள் யாருக்கும் பிரச்னை இல்லாமல் அதை அவர்கள் விருப்பத்துடன் செய்யும்போது மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும்?

    கோவில் தீமிதியில் ஒடுவது அவர்களுக்கு பெருமிதமாக இருக்கிறது. அந்தக் குதூகலத்தை ஏன் தடுக்கவேண்டும்? இவையெல்லாம்தான் நமது கலாசாரத்துக்கு அழகு சேர்க்கின்றன.

    இந்தக் கலாசாரத்தில் ஒவ்வொரு சமூகமும் தனித்தனிப் பழக்கவழக்கங்களைக் வைத்திருக்கின்றன. அதனால்தான் இந்தக் கலாசாரம் இவ்வளவு வண்ணமயமாகவும் உற்சாகமானதாகவும் இருக்கிறது. உங்களது இப்போதைய அறிவுஜீவி எண்ணங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கடன் வாங்கப்பட்டது.

    உங்கள் கல்வித் திட்டம் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் இப்படி எண்ணுகிறீர்கள்.மற்றபடி உங்களை நீங்கள் அறிவுபூர்வமாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களை வாழ்க்கையில் உற்சாகமாக இருக்கவிடுங்கள். இவற்றை எல்லாம் அழித்துவிட்டு எல்லாரும் ஒரே மாதிரிதான் நடக்க வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும் என்றால் பிறகு வாழ்க்கையில் எங்கே உற்சாகத்துக்கு இடம் இருக்கும்?
    Next Story
    ×