search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி மாதத்தில் கூழ் படைப்பது ஏன்?
    X

    ஆடி மாதத்தில் கூழ் படைப்பது ஏன்?

    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
    தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ச்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்காமல் ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகா தேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தான்.

    தீக்காயங்களால் ரேணுகாதேவிக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலையை பறித்து ஆடையாக அணிந்து கொண்டார். ரேணுகா தேவிக்கு பசி அதிகம் ஆனதால் அருகில் இருந்த கிராமமக்களிடம் சென்று உணவு கேட்டார். அதற்கு அவர்கள் பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர் ஆகியவற்றை வழங்கினர்.

    இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவு அருந்தினார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம் உலக மக்கள் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும் என்று வரம் அளித்தார். இந்த சம்பவத்தை நினைவு கூரும் விதத்தில் தான் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×