search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் மூங்கில்குத்துமுனியப்பன், காவல் தெய்வங்களையும் வழிபட வந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்
    X
    சிறப்பு அலங்காரத்தில் மூங்கில்குத்துமுனியப்பன், காவல் தெய்வங்களையும் வழிபட வந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்

    மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழா

    சேலம் நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழாவில் எருதாட்டம் நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்காரப்பட்டியில் பிரசித்திப்பெற்ற மூங்கில்குத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருதாட்டம் நடத்தப்படும். கடந்த 2012-ம் ஆண்டு இந்த கோவில் விழாவில் எருதாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கோவிலில் எருதாட்டம் நடத்தப்படவில்லை.

    இதற்கிடையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் எருதாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவில் திருவிழாவையொட்டி காலையில் ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    எருதாட்டத்திற்காக 18 பட்டியை சேர்ந்த குழுக்கள் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சென்று 90 காளைகளை பிடித்துக் கொண்டு இளம்பிள்ளை அருகே உள்ள காடையாம்பட்டிக்கு வந்தனர். நேற்று மதியம் அந்த காளைகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டியதுடன், கழுத்தில் மாலையிட்டு அலங்கரித்து நெய்காரப்பட்டிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது காளையின் கழுத்தில் கட்டப்படும் வடக்கயிற்றை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக கோவிலை அனைத்து காளைகளும் மூன்று முறை சுற்றி அழைத்து வரப்பட்டன.

    இதையடுத்து காளைகள் ஓடவிடப்பட்டன. அப்போது காளையின் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை இருப்புறங்களிலும் இளைஞர்கள் பிடித்துக் கொண்டு வேகமாக விரட்டினர். சிலர் அந்த காளைகளை விரட்டி அடக்க முயன்றனர். மேலும் காளைகளின் குறுக்கே சிலர் பொம்மைகளை காட்டி மிரள செய்தனர். மொத்தம் 90 காளைகள் ஓடவிடப்பட்டன.

    இந்த விழாவை கொண்டலாம்பட்டி, வேம்படித்தாளம், இளம்பிள்ளை, பூலாவரி, ஆட்டையாம்பட்டி, காட்டூர், சிவதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். எருதாட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் வருகிற 26-ந் தேதி சாமிக்கு மறுபூஜை நடைபெறுகிறது.
    Next Story
    ×