search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஜம்புகேஸ்வரர் கோவிலில் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை காணலாம்.
    X
    பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஜம்புகேஸ்வரர் கோவிலில் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை: ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

    இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையாகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்படுகிறது.

    அதிகாலை நேரத்திலேயே பக்தர்கள் அதிக அளவில் வந்து அம்மனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் காத்து நிற்பார்கள். அப்படி காத்து நிற்கும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி கொள்ளாமலும், சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் கோவில் வளாகத்தில் கொடி மரம் அருகில் இருந்து சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே அதிகாலையிலேயே கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தடுப்பு வேலி வழியாக வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க முடியும். மேலும் வரிசையில் நிற்கும் பக்தர்கள் முண்டியடித்து கொண்டு செல்வதை தடுப்பதற்காகவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

    இதற்காக அவர்கள் நேற்று மாலை கோவில் வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டது. இரவு வரை அம்மன் சன்னதி நடை திறந்து இருக்கும் என்பதால் பக்தர்கள் அமைதியாக வந்து வரிசையில் நின்று தரிசனம் செய்யும்படி வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

    வருகிற 28-ந்தேதி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக 2 இடங்களில் ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின்சார மோட்டார் மூலம் கோவில் தெப்ப குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியும் நடந்து வருகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் மற்றும் சிவன் கோவில்களில் எல்லாம் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
    Next Story
    ×