search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 29-ந்தேதி தொடங்குகிறது
    X

    கடலூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 29-ந்தேதி தொடங்குகிறது

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனிமாத பிரம்மோற்சவம் வருகிற 29-ந் தேதி(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் திருமலையப்பன் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா புறப்பாடும், இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும், 1-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ராஜகோபாலன் அலங்காரத்தில் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது.

    விழாவில் 2-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வேணுகோபாலன் அலங்காரத்தில் புண்ணியகோடி விமானத்திலும், இரவு 8 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபத நாதன் அலங்காரத்திலும் வீதி உலா நடக்கிறது. 3-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், காலை 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7 மணிக்கு தங்க கருட வாகன மகோற்சவமும் நடக்கிறது.



    பின்னர் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) துவாதச ஆராதனை விழா நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், கொடியிறக்கம், பூர்ணாஹூதி கும்பப்ரோஷணம் ஆகியவை நடைபெற உள்ளன. மறுநாள்(புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.

    விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பஜனை ஆகியவை நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோவிந்தசாமி, செயல் அலுவலர் முத்துலட்சுமி, தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×