search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை மாதம் 7-ந்தேதி தொடக்கம்
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை மாதம் 7-ந்தேதி தொடக்கம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவில் இணை ஆணையர் ஜெயராமன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்டாபிஷேகம் (ஆனி திருமஞ்சனம்) மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேக விழா வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்கக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    7 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சன குடம் எடுத்து வருதல், 9.15 மணிக்கு திருமஞ்சனம் பெரிய சன்னதி சேருதல், 9.45 மணிக்கு அங்கில் தொண்டைமான் மேடு சேருதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல் நடக்கிறது. மேலும் அன்று முழுவதும் பெருமாள் சன்னதியில் மூலவர் சேவை இல்லை. 8-ந்தேதி பெரிய பெருமாள் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தளிகை எடுத்தல், பகல் 12 மணிக்கு தளிகை அமுது, 12.30 மணிக்கு செய்தல் நடக்கிறது.



    மாலை 4.30 மணிக்கு மேல் பெருமாள் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 14-ந்தேதி ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அதன்படி அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்க குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு காவிரியில் இருந்து திருமஞ்சனம் குடம் எடுத்து வருதல், 9.30 மணிக்கு திருமஞ்சனம் தாயார் சன்னதி சேருதல், 10 மணிக்கு அங்கில்கள் தாயார் சன்னதி வசந்த மண்டபம் சேருதல், மாலை 4 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல், இரவு 8.30 மணிக்கு மங்களஹாரத்தி நடக்கிறது. அன்று தாயார் சன்னதியில் மூலவர் சேவை இல்லை.

    15-ந்தேதி காலை 7 மணிக்கு தளிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு தளிகை அமுது செய்தல், 1 மணிக்கு மங்களஹாரத்தி நடக்கிறது. அன்று மதியம் 3.30 மணி முதல் தாயார் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 21-ந்தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் காட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.

    மேலும் 7-ந்தேதி நடக்கும் ஜேஷ்டாபிஷேகத்தின் போது உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கில்கள் சாற்றப்படும். அன்றைய தினம் மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படும். 8-ந்தேதி திருப்பாவாடை நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தனு மண்டபத்தில் அதிக அளவு சாதம் தயாரித்து சன்னதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×