search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகியகூத்தர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    அழகியகூத்தர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி ஆற்றையொட்டி செப்பறை அழகியகூத்தர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 24-ந்தேதி (சனிக் கிழமை) அழகியகூத்தர் பெருமாளுக்கு திருவாதிரை அபிஷேகம் நடைபெறுகிறது. 27-ந்தேதி காலை 10 மணிக்கு அழகியகூத்தர் பெருமாள் விழா மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தியும், மறுநாள் 28-ந்தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் சுவாமி காட்சி அளிக்கிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். 11.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    30-ந்தேதி காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், நடன தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தாமிரசபைக்கு எழுந்தருளுகிறார்.
    Next Story
    ×