search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மார்கழி மாதத்தை ‘பீடுடைய மாதம்’ என்று அழைக்க காரணம்
    X

    மார்கழி மாதத்தை ‘பீடுடைய மாதம்’ என்று அழைக்க காரணம்

    பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாகவும், வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதமாகவும் முன்னோர் கருதியதாலேயே இதனை “பீடுடைய மாதம்’ என்றனர்.
    அசுர சம்ஹாரத்திற்காக பகவான் பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளிய “வைகுண்ட ஏகாதசி’ கொண்டாடப்படுகிறது. கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்னதாக வைகுண்டத்திற்கு சென்றவர் யாருமில்லை என்பதால் வைகுண்ட வாசல் மூடப்பட்டிருந்ததாகவும் பின்னர் வைகுண்ட ஏகாதசி அன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம்.

    இந்த வைபவத்தை முதன்முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் ஏற்படுத்தினார் என்பர். மார்கழி மாதம் இருபத்து ஏழாம் தேதி திருப்பாவை 27 ஆம் பாடலில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று தொடங்குகிறது. “பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்று 27 ஆம் பாடலில் சொன்னவாறு இன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் நெய்வழிய சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து “கூடாரைவல்லி’ என்று விசேஷமாகக் கொண்டாடுவர்.

    ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன் அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான். அன்றைய தினத்தை “கீதா ஜயந்தி’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. மார்கழிப் பௌர்ணமியன்று “தத்தாத்ரேயர் ஜயந்தி’ தினம். மேலும் தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மாதமும் மார்கழியே.



    மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு “குருவார பூஜை’ எனப் பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும்.

    இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும், நம் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணை செய்யும். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாகவும், வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதமாகவும் முன்னோர் கருதியதாலேயே இதனை “பீடுடைய மாதம்’ என்றனர்.
    Next Story
    ×