search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கணவனுக்காக மனைவி கட்டிய ‘கிணறு கோவில்’
    X

    கணவனுக்காக மனைவி கட்டிய ‘கிணறு கோவில்’

    குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் கணவனுக்காக பெண் ஒருத்தி வடிவமைத்த ‘ராணி கி வாவ்’ படிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மனைவிக்காக கணவன் கட்டிய தாஜ்மகாலை மட்டுமே புகழ்ந்து வரும் நம்மில் பலருக்கும், தன் கணவனுக்காக பெண் ஒருத்தி வடிவமைத்த நினைவிடத்தைப் பற்றி தெரியவில்லை. அது குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்த நினைவிடம் ‘ராணி கி வாவ்’ படிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் கலைப் பொக்கிஷமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் இந்த இடம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. கலைப் பார்வையில் பிரமிப்பாகவும், ஆன்மிகப் பார்வையில் பக்தி மனம் கமழும் வகையிலும் இந்த அதிசய கிணறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    காதலியின் நினைவுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை போல, சோலங்கி வம்சத்து அரசனான பீமதேவரின் நினைவாக அவருடைய மனைவி உதயமதி 1050-ல் இந்தப் படிக்கிணறை கட்டினார். கணவனின் நினைவுக்காக மனைவி கட்டிய இந்த கிணற்றில் பல சுவாரசியமான கதைகள் புதைந்திருக்கின்றன. அதை அறிந்து கொள்வோம்..

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் படிக்கிணறுகளை கட்டினர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அதிகளவிலான படிக்கிணறுகள் கட்டப்பட்டன. பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீரை சேகரிக்கவும், வாணிபத்துக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தங்குவதற்காகவும் இதுபோன்ற கிணறும் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.



    அப்படி கிணறுகள் அதிகமாக உருவாக்கப்பட்ட காலக்கட்டத்தில் தான் உதய மதி, கணவரின் நினைவாக இந்தக் கோவில் கிணற்றையும் உருவாக்கி உள்ளார். இது கிணறு வடிவில் அமைந்திருக்கும் நினைவு கோவில். கணவனுக்காக உதயமதி தொடங்கிய இந்த கிணறு ஆலயத்தின் பணி, அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் கரன்தேவ் காலத்தில்தான் முடிவடைந்தது.

    8 அடி ஆழத்தில் படி இறங்கிச்செல்லும் வகையில் இந்தக் கட்டுமானம் ஆரம்பிக்கிறது. இந்த நினைவுக் கோவிலை தரைமட்டத்தில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் வகையில் அமைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஆழம் என்பது நம் மனதிற்குள் இறங்கும் உணர்வை அளிக்கிறது. அதனால் கணவனின் நினைவுகளை ஆழ்மனதிற்கு இறங்கிப் பார்க்கும் வகையில், இந்த இடத்தை அவரது மனைவி வடிவமைத்திருக்கிறார். இதன் படிகள் பல நிலைகளாக இறங்கிச் செல்கின்றன. ஒவ்வொரு நிலையும் பெரும் அரண்மனை போலத் தூண்களும், மாடிகளும் உப்பரிகைகளுமாகக் கட்டப்பட்டுள்ளன.

    திரும்பும் திசைகளில் எல்லாம், பார்க்கும் சுவர்களில், தூண்களில் எல்லாம் இறைவனின் சிற்பங்களே காட்சியளிக்கின்றன. பெரும்பாலும் விஷ்ணுவின் வடிவங்களே ஆலயத்தை நிறைத்தபடி இருக்கின்றன. அத்துடன் கிருஷ்ண லீலை காட்சிகளும் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளது. கணவனின் நினைவாக கட்டிய இடத்தில் ராமனின் சிலைகளும் உள்ளன. பெரும்பாலும் வைணவச் சிற்பங்கள் நிறைந்திருந்தாலும் மகிஷாசுரமர்த்தனி, துர்க்கை போன்ற தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக இங்குள்ள மகிஷாசுரமர்த்தனி சிலையை சிற்பங்களில் ஒரு பெரும் படைப்பு என்றே சொல்லவேண்டும். ‘மகிஷம்’ நாக்குத் தள்ளிய நிலையில் தரையில் சரிந் திருக்க, தாய்மை நிறைந்த முகத்துடன் அதை வதம் செய்கிறாள் தேவி.



    இத்தகைய சிறப்புகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் இந்த கிணறை அவ்வளவு சுலபத்தில் தேடிப்பிடித்து விட முடியாது. நெருங்கிச்செல்லும் வரை இந்தக் கட்டுமானத்தின் அளவும், அழகும் நம் கண்ணுக்குப்படாது. ஏனெனில் சோலங்கி அரசை கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜி என்பவர், குஜராத்தில் இருந்த எல்லாக் கோட்டைகளையும், கோவில்களையும் இடித்து அழித்தார். அதில் ராணி கி வாவ் கிணறு கோவிலும் ஒன்று. இதை இடிக்க பெரிதாக மெனக்கெடவில்லை. அருகில் இருந்த கட்டிடங்களையும், மதில் சுவர்களையும் இடித்து கிணறை மூடிவிட்டார். 1958 வரை மண் மூடிக்கிடந்த இந்த பொக்கிஷக் கிணறை, 1972-ல் அகழ்வாராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வந்தனர். 1984-ல் இருந்து அது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

    இதில் சேதமாகி தப்பிய கலை பொக்கிஷங்களும், இந்து மத சிலைகளும் தான் இன்று சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்த கிணற்றில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு சுரங்கவழியும் உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு, படான் பகுதிக்கு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை அந்த சுரங்கவழி பாதை நீள்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா? அல்லது யுத்த காலத்தில் தப்பிச்செல்லும் வழியா? என்று அறியப்படவில்லை.

    இப்படி பல சந்தேகங்களை கிளப்பியிருக்கும் இதுவே இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழிப் பாதையாக குறிப்பிடப்படுகிறது. படிகளாக இறங்கிச்செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. பாதிக்குமேல் செல்ல இன்று அனுமதி இல்லை. அதனால் கண்ணில் படும் காட்சி வரை பார்த்துவிட்டு மேலே வரவேண்டியது தான். இந்த நினைவு கிணற்றின் அடியில் இருக்கும் தண்ணீரை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் தெரியும் வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.
    Next Story
    ×