search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சையில் 24 பெருமாள் கருட சேவை விழா இன்று நடக்கிறது
    X

    தஞ்சையில் 24 பெருமாள் கருட சேவை விழா இன்று நடக்கிறது

    தஞ்சையில் 24 பெருமாள் கருட சேவை விழா இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்கப்பெருமாள், நீலமேகப்பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களின் கருட சேவை இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இவற்றுடன் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 கோவில்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஏனைய 6 கோவில்களும் சேர்ந்து 24 கோவில்கள் கருட சேவை நடக்கிறது. தஞ்சையில் கடந்த 82 ஆண்டாக இந்த கருடசேவை பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 83-வது ஆண்டு கருடசேவை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் அனுமதியோடு ராமானுஜ தர்சன சபாவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதில் விழாவின் தொடக்கமாக நேற்று வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 24 கருடசேவை விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு கொடிமரத்து மூலை பகுதியை வந்தடைகின்றனர்.



    அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுதவண்ணம் முதலில் வர அவரைத்தொடர்ந்து நீலமேகப்பெருமாள் லெட்சுமியுடன் மற்ற பெருமாள்களான நரசிம்மபெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்ன பெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கொண்டிராஜபாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசுவாமி பெருமாள்,

    எல்லையம்மன் கோவில் தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜப்பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப்பெருமாள், மேலராஜவீதி விஜயராமபெருமாள், நவநீதகிருஷ்ணன், சகாநாயக்கன் தெரு பூலோககிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளிஅக்ரகாரம் கோதண்டராமசாமி பெருமாள், சுங்காந்திடல் லட்சுமி நாராயணபெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேசபெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்படுகிறார்கள்.

    பின்னர் 24 பெருமாள்களும் வரிசையாக கருடவாகனத்தில் கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலாவந்து மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைகிறார்கள். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அவரவர் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
    Next Story
    ×