search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாங்காடு காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது
    X

    மாங்காடு காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது

    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

    இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து , பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    இந்த மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது.

    மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாறு வருமாறு:

    உலக மாந்தர்களை உய்விக்க அந்த அகிலாண்ட நாயகனும் நாயகியும் நடத்தும் திருவிளையாடல்கள் பல, அவற்றுள் ஒன்றுதான் முப்பதிரண்டு அறங்களையும் நாம் அறியும் பொருட்டு அந்த ஜகத் ஜனனி ஜகன்மாதா தானே பூலோகத்தில் வந்து அவற்றை நமக்கு செய்து காட்டருளி சிவ பூசை செய்த திருவிளையாடல்.
    ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது ஞானப் பூங்கோதையாம் எம் அன்னை சிறு குழந்தையைப் போல விளையாட்டாக சூரிய, சந்திரர்களான அந்தப் பித்தனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது.

    மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர். இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

    இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் ஆம்ரவனமாம் இந்த மாங்காட்டுப்பதியிலே வந்து அவதரித்தாள். மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முணையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள்.

    இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள். ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

    மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரியும் மலையரசன் மகளுமான தன் தேவியின் மேல் கருணை கொண்ட செஞ்சடையோன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரி யாருக்கு முதலில் காட்சி தந்தார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

    ஆம்ரவனத்தில் தவம் இருந்த அம்மை, தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வரலானாள்.



    பின்னர் கம்பாநதியை பெருகிவரச் செய்து தழுவக்குழைந்த நாதராகி பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். இவ்வாறு மாங்காட்டிலே தவக்கோலம் காட்டிய பண்டாசுரனை அழித்த அம்பிகை அதனால் காஞ்சியிலே மணக் கோலம் காட்டி “கல்யாண காமாட்சி “ யாக அருள் பாலிக்கின்றாள்.

    பவளம் போல் மேனியனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்க மாட்டாமல் தவித்தார்கள் நிலங்கள் வற்றிப் போயின. கால்நடைகள், மக்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் செய்வதறியாமல் திகைத்தன.

    அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கரர் மாங்காட்டுக்கு வந்தார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன “அஷ்ட கந்தம்” அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது.

    எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்கரத்தை ஆதி சங்கர பகவத் பாதாள் உருவாகியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ சகரத்திற்கே முக்கிய பிரதானம். குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

    தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு.

    அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது. மாவடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.
    Next Story
    ×