search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், ஆகாசமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், ஆகாசமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா

    நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் ஆகாசமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆகாசமாரியம்மனுக்கு திரு உருவம் கிடையாது. அகல் விளக்கை அம்மனாக பாவித்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். பக்தன் மீது கொண்ட பாசத்தால் சமயபுரம் மாரியம்மன், நாச்சியார்கோவிலுக்கு வந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழாவையொட்டி ஆகாசமாரியம்மன் உருவம் தர்ப்பை புல்லால் உருவாக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த விழாவின்போது மட்டுமே அம்மனின் திரு உருவத்தை காண முடியும். இந்த விழாவின்போது கோவிலில் செப்புக்குடத்தில் உள்ள நீரையும், எலுமிச்சை பழச்சாற்றையும் அருந்தினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் நேற்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாடைக்காவடி, தொட்டில்கட்டி தூக்குதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த ஆகாச மாரியம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி இசை விழா கமிட்டி சார்பில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    Next Story
    ×