search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று தொடங்கியது. விழா அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிப்பதமிடுதல், 5 மணிக்கு நடை திறப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை போன்றவை நடந்தன. தொடர்ந்து, காலை 6 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, நண்பகலில் உச்சிப்படிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம், கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் வீற்றிருந்து கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றுப்பகுதி கிராமங்களில் பவனி வருதலும் நடைபெறும். பின்னர், இரவு 12 மணிக்கு தலைமைப்பதியில் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு அய்யா காட்சியளித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதர்மமும் நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான வருகிற 5-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு 9 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன பவனியும் நடைபெறும்.
    Next Story
    ×