search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற ஹாஜி அப்துல் பாபா
    X

    சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற ஹாஜி அப்துல் பாபா

    சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் சேவைத் திலகமாக திகழ்ந்தனர். அவர்களில் ஹாஜி அப்துல் பாபாவும் குறிப்பிடத்தக்கவர்.





    ஹாஜி அப்துல் பாபா

    ஹாஜி அப்துல் பாபாவின் சமாதி





    சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் சேவைத் திலகமாக திகழ்ந்தனர். அவர்களில் ஹாஜி அப்துல் பாபாவும் குறிப்பிடத்தக்கவர்.மராட்டிய மாநிலத்தில் தப்தி நதிக்கரையில் உள்ள நான்தெத் என்ற ஊரில் சுல்தான் என்பவருக்கு மகனாக 1875-ம் ஆண்டு அப்துல் பாபா பிறந்தார். அவருக்கு அம்ருதீன் என்பவர் ஆசிரியராக இருந்து பாடம் சொல்லி கொடுத்து வந்தார்.

    1889-ம் ஆண்டில் ஒரு நாள் இரவு அம்ருதீன் கனவில் சாய்பாபா தோன்றினார். இரண்டு மாம்பழங்களை அவர் கொடுத்தார். இந்த இரண்டு மாம்பழங்களையும் அப்துலிடம் கொடுத்து சீரடிக்கு அனுப்பி வை என்றார். மறுநாள் காலை அவர் கண் விழித்தபோது அவர் படுக்கை அருகே இரண்டு மாம்பழங்கள் இருந்தன. அம்ருதீனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

    உடனே அவர் அப்துலை அழைத்து இரண்டு மாம்பழங்களையும் எடுத்து கொடுத்தார். “நீ உடனே சீரடிக்கு செல். பாபா உன்னை அழைக்கிறார்” என்றார்.
    அப்போது அப்துலுக்கு வயது பதினான்கு. சாய்பாபா பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். அம்ருதீன் சொன்னதை கேட்டதும் சீரடிக்கு செல்ல சம்மதித்தார்.

    சுமார் 200 மைல் பயணம் செய்து சீரடியை அப்துல் பாபா சென்றடைந்தார். அப்துலை கண்டதும், “என் காகா வந்து விட்டான்” என்று கூறி பாபா மகிழ்ச்சியடைந்தார். அப்போது அப்துல் தான் கொண்டு வந்த 2 மாம்பழங்களையும் எடுத்து பாபாவிடம் கொடுத்தார். இந்த பழங்கள் உனக்குத்தான் நீயே சாப்பிடு என்று கூறி அப்துல்லாவிடம் 2 மாம்பழங்களையும் பாபா திருப்பிக் கொடுத்தார்.

    அதை பெற்றுக் கொண்ட அப்துல், சீரடியில் எனக்கு ஏதாவது வேலை உள்ளதா? என்று பாபாவிடம் கேட்டார். உடனே சாய்பாபா, “நீ தினமும் மசூதி, சாவடியை சுத்தம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார். அதன்படி பாபா செல்லும் இடத்தை எல்லாம் அப்துல் சுத்தம் செய்யும் பணிவிடையை செய்து வந்தார். சாய்பாபா லெண்டி தோட்டத்தை உருவாக்கிய போது அதற்கு பாதுகாவலராக அப்துல்லாவைதான் பாபா நியமனம் செய்தார். அவர் பாபாவை தவிர வேறு யாரையும் லெண்டித் தோட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை.

    லெண்டி தோட்டத்துக்குள் அரச மரத்தடியில் பாபா நந்தா விளக்கு ஒன்றை ஏற்றினார். அந்த விளக்கை இரவும், பகலும் அணையாதபடி எரிய வைக்க வேண்டிய பொறுப்பை அப்துலிடம் பாபா ஒப்படைத்தார். பாபாவும், அப்துலும் கட்டிக்காத்த அந்த நந்தா விளக்கு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. லெண்டி தோட்டத்துக்குள் செல்லும் பாபா, நந்தா விளக்கு அருகில் அமர்ந்ததும், 2 பானைகளில் தண்ணீர் எடுத்து வந்து வைக்கச் சொல்வார். உடனே அப்துல்லாவும் 2 பானைகளில் தண்ணீரை எடுத்துச் சென்று வைப்பார்.

    பிரார்த்தனை முடிந்ததும் சாய்பாபா அந்த 2 பானை தண்ணீரையும் நாலா பக்கங்களிலும் கொட்டி விடுவார். சாய்பாபா ஏன் அப்படி செய்கிறார் என்று ஒருநாள் கூட அப்துல்லா கேட்டதே இல்லை. அதைத் தெரிந்து கொள்ளவும் அவர் முயற்சி செய்ததில்லை. நந்தா தீபம் தவிர துவாரகமயி, சாவடி, குருஸ்தானிலும் தீபம் ஏற்றும் பணியை அப்துல் செய்து வந்தார். தினமும் மாலை விளக்குகளுக்கு எண்ணெய் வார்த்து தீபம் ஏற்றுவதை அவர் ஒரு இறை கடமையாகவே செய்து வந்தார்.


    ஹாஜி அப்துல் பாபா

    இவை தவிர சாய்பாபா உடுக்கும் வெள்ளை நிற அங்கியை நன்றாக துவைத்து சுத்தம் செய்து கொடுக்கும் வேலையையும் அப்துல் செய்தார். சீரடி எல்லையில் ஓடும் நீரோடைக்கு பாபா உடைகளை எடுத்துச் சென்று அவர் துவைத்து வருவார். இந்த பணிகள் செய்யும் நேரம் போக மீதி நேரங்களில் அவர் சாய்பாபா எதிரில் உட்கார்ந்து குர்ஆன் படிப்பார். குர்ஆனில் கூறப்பட்டிருப்பதை ஒதுவார்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சாய்ப்பாவுக்காக அவர் தன் வாழ்வை மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொண்டார். அவரது சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் பாபாவே நிறைந்திருந்தார். ஆனால் பாபாவோ, அப்துல்லாவுக்கு எந்த ஒரு சலுகையும் காட்டியதே இல்லை. தினமும் பாபாவிடம் ஏராளமான பணம் காணிக்கையாக குவியும். அந்த தட்சணை பணத்தை தினமும் மாலை மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்து விடும் பாபா, அதில் ஒரு பைசாவை கூட அப்துல்லாவுக்கு கொடுத்ததே இல்லை.

    இதன் காரணமாக பாபாவை போலவே அப்துல்லாவும் தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தார். ஒரு தடவை சீரடிக்கு அப்துல்லாவின் முந்தைய குரு வந்தார். அவர் அப்துல்லாவிடம், “நீ இனி சீரடியில் இருக்க வேண்டாம். என்னுடன் வந்து விடு” என்றார். அதை கேட்ட அப்துல்லா, “சாய்பாபா உத்தரவு இல்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது என்று கூறி விட்டார்.

    சாய்பாபாவும் அந்த குருவிடம், “அப்துல்லாவின் சேவை இங்கே தேவைப்படுகிறது. எனவே அவர் வேறு எங்கும் வர மாட்டார்” என்று கூறி அப்துல்லாவை அனுப்ப மறுத்து விட்டார். இதனால் பழைய குரு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அப்துல்லா மீது பாபாவும் அந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார். அவருக்கு பாபா பணத்தை அள்ளி, அள்ளிக் கொடுக்கா விட்டாலும் ஆசி வழங்க தவறியதே இல்லை.

    அப்துல்லாவிடம் சாய்பாபா அடிக்கடி, “பகலில் தூங்காதே, அதிக நேரம் தூங்காதே, அளவுக்கு அதிகமாக சாப்பிடாதே, எவ்வளவு ருசியான உணவாக இருந்தாலும் நிறைய சாப்பிடாதே, ஒரே நேரத்தில் பல வகையான பதார்த்தம் வைத்து சாப்பிடாதே” என்பன போன்ற அறிவுரைகளை சொல்வதுண்டு. அந்த அறிவுரைகளை அப்துல்லா குறித்துக் கொண்டார். பாபாவின் அறிவுரையாக அவை இன்று உலகம் முழுவதும் விரிந்து வியாபித்துள்ளது. ஒருநாள் அவரை அழைத்த சாய்பாபா, சாவடிக்கு எதிரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் குடியேறுமாறு உத்தரவிட்டார். அதன்படி அந்த வீட்டில் அப்துல் வசித்து வந்தார்.

    பாபாவுக்காக அவர் தினமும் செய்யும் பணிகளில் சிறு குறை கூட வைத்தது இல்லை. பாபாவின் கடைசி நாள் வரை அவரது சேவை தொடர்ந்தது.
    பாபா தெய்வமான பிறகு அவர் புகழை இந்த உலக மக்கள் உணர்ந்து கொள்ள பெரிதும் உதவியாக அவர் இருந்தார். சாய்பாபா சொன்ன நீதிகளை, கோட்பாடுகளை மறக்காமல், எப்போதும் மனதில் நிலை நிறுத்தி இருந்த அப்துல் அவற்றை மற்றவர்கள் புத்தகமாக தொகுத்து வெளியிட உதவினார்.

    பாபா எத்தனையோ அற்புதங்கள் செய்து இருக்கிறார். அவற்றையெல்லாம் பாபா அருகில் சுமார் 36 ஆண்டுகள் இருந்து பார்த்தவர் அப்துல்லாதான்.
    எனவேதான் இவர் கொடுத்த தகவல்கள் 100 சதவீதம் ஆதாரமாக உள்ளன. சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வெளியிட்ட நரசிம்ம சுவாமிஜி இரண்டு தடவை அப்துல்லாவிடம் 1936-ல் பேட்டி கண்டு தகவல்களை சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஹாஜி அப்துல் பாபாவின் சமாதி

    பாபா பக்தர்களின் அனுபவங்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் அப்துல்லாவின் தகவல்கள் பிரசுரமானது.இது மட்டுமின்றி குர்ஆனில் இருந்து சில கருத்துக்களை அப்துல் படித்து காட்டும்போது, இந்து சமயத்தில் அதே கருத்து எங்கெங்கு சொல்லப்பட்டுள்ளது என்பதை பாபா விளக்கமாக கூறுவார். சில சமயம், உலக சமயங்களில் எந்தெந்த கருத்துக்கள், குர்ஆனில் எப்படி இடம் பெற்றுள்ளன என்று பாபா அழகாக விளக்கம் அளிப்பார். படிக்க தெரியாத பாபா இவற்றை எப்படி சொல்கிறார் என்று அப்துல்லா உள்பட எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

    இதனால் பாபா குர்ஆனுடன் ஒப்பிட்டு சொன்ன கருத்துக்களை எல்லாம் அப்துல்லா குறிப்புகளாக எழுதி வைத்தார். அந்த குறிப்புகளை எல்லாம் மும்பையைச் சேர்ந்த வி.பி.கெர் என்பவர் சேகரித்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பத்திரப்படுத்தி உள்ளார். பாபா ஒரு மர்ம புதையல் என்பது அந்த குறிப்புகளை படிக்க, படிக்க நமக்கு தோன்றும்.

    சாய்பாபாவிடம் அப்துல்லா வைத்திருந்த பக்தியும், பாசமும் அளவிட முடியாதது. பாபா என்ன சொல்கிறாரோ... அதுதான் அப்துல்லாவுக்கு வேத வாக்கு. அது மட்டுமல்ல பாபாவின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் பொக்கிஷமாகக் கருதினார். அதனால் தானோ, என்னவோ சாய்பாபா கூறும் கதைகள், அறிவுரைகள் தத்துவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வதை அப்துல்லா வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நல்ல பழக்கம், இன்று.... சாய்பாபா பற்றிய பல உண்மையான தகவல்களுக்கு ஆவணமாக உள்ளது.

    அப்துல்லா மட்டும் குறிப்புகள் எடுத்து சாய்பாபா அருளிய அறிவுரைகளை எழுதி வைக்காமல் இருந்திருந்தால் சாய் பக்தர்கள் நிறைய விஷயங்களை இழந்து இருப்பார்கள். எனவே சாய் மீது அன்பு கொண்டுள்ள ஒவ்வொரு பக்தரும் அப்துல்லாவையும் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். சாய்பாபாவின் வாழ்க்கையோடு ஒரு வகையில் அவர் ஒன்றி இருந்தார். இதனால் பலரும் அவரை அப்துல் பாபா என்றே அழைத்தனர்.

    சாய்பாபா மகா சமாதி அடைந்த பிறகும் அப்துல்லா வேறு எங்கும் செல்லவில்லை. அங்கேயே தங்கி விட்டார். பாபாவின் சமாதியை அலங்கரிப்பது, தீபம் ஏற்றுவது போன்றவற்றை தினமும் செய்து வந்தார். பாபாவுக்காக படைத்த நைவேத்தியத்தையே உணவாக சாப்பிட்டு காலத்தை கழித்தார்.

    அவரிடம் சாய் பக்தர்கள், தங்கள் பிரச்சினைகளை சொல்லி பாபாவிடம் கேட்டு கூறுமாறு சொல்வார்கள். உடனே அப்துல்லா பாபா சொல்லி தான் எழுதிய அறிவுரை நோட்டுப் புத்தகத்தை திறந்து பார்ப்பார். அதில் எழுதி உள்ளதைப் படிப்பார். அவை பக்தர்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தன. நிறைய சாய் பக்தர்களின் கேள்விகளுக்கு அப்துல்லா எழுதி வைத்திருந்த குறிப்பு புத்தகத்தில் விடை கிடைத்தது.

    நாளடைவில் துவாரகமாயியில் உள்ள உதியையும் அப்துல்லா பக்தர்களுக்கு வழங்கினார். சாய்பாபாவை நினைத்து அவர் கொடுத்த உதி, மாபெரும் மருந்தாக இருந்தன. இதனால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

    தன் கடைசி மூச்சு வரை அவர் சீரடி சாய் மந்திரிலேயே இருந்தார். சுமார் 66 ஆண்டுகள் அவர் பாபாவுக்கும், பிறகு பாபாவின் மகா சமாதிக்கும் சேவை புரிந்தார்.
    1954-ம் ஆண்டு அப்துல் பாபா மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 83. அவரது உடல் சீரடி ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதி மந்திரில் வழிபாடு செய்த பிறகு குருஸ்தானுக்கு சென்று விட்டு அப்துல்பாபா சமாதியை வழிபடலாம்.
    Next Story
    ×