search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது
    X

    பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது

    பழமையும் பெருமையும் வாய்ந்த பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக பூப்பல்லக்கு திருவிழா 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை தா்மராஜன்கோட்டையில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலையின் மேற்குபுறத்தில் அமைந்துள்ளது பழமையும் பெருமையும் வாய்ந்த பாலதண்டாயுதபாணி திருக்கோவில். இங்கு வைகாசி விசாகப்பூப்பல்லக்கு திருவிழா வருகிற 25-ந்தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பாலாபிஷேகம் வரும் அடுத்த மாதம் 7-ந்தேதி வைகாசிவிசாகத்தன்று நடக்கிறது.

    அன்று காலை 9 மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள மவுனகுருசாமி மடத்திலிருந்து பக்தா்கள் அலகுகுத்தி பூக்குழி இறங்கி பால்குடம் எடுத்து 3 கி.மீ.தூரம் பாதயாத்திரையாக சென்று கோவிலை அடைகின்றனா். அங்கு பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. மறுநாள் பட்டுப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி எழுந்தருளி கோவிலிருந்து புறப்பட்டு கள்ளா் மடம் வந்து சேருகிறார்.

    பின்னர் 9-ந்தேதி வல்லபகணபதி திருக்கோவில் வளாகத்தில் வண்ணமலா்களால் அலங்காிக்கப்பட்ட மின்விளக்கு தோரணங்களுடன் கூடிய பூப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி அலங்காரத்துடன் புறப்பட்டு வாடிப்பட்டி நகா் முழுவதும் முக்கிய வீதிகளில் வலம் வருகிறார். அப்போது பல்வேறு திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளி, தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதூா், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசாமிகள் மடம் வழியாக வந்து விடிய விடிய பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மறுநாள் மதியம் 12 மணிக்கு பாலதண்டாயுதபாணி கோவிலை சென்றடைகிறார். ஏற்பாடுகளை விழா கமிட்டியினா், சொக்கையாசாமி வாரிசுகள், சீா்பாதம்தாங்கிகள், கிராமப்பொதுமக்கள் செய்து வருகின்றனா். சுகாதாரப்பணி ஏற்பாடுகளை பேரூராட்சி நிா்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீசாரும் செய்து வருகின்றனா்.
    Next Story
    ×