search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உளுந்தூர்பேட்டை அருகே திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    உளுந்தூர்பேட்டை அருகே திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

    உளுந்தூர்பேட்டை அருகே திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அன்று சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், இரவு சாமி வீதிஉலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நடைபெற்றது.

    சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதன் பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் திரவுபதி அம்மன் மற்றும் அர்ஜூனன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தொடர்ந்து, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் செந்தாமரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு கூடி நின்ற திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மாலை மஞ்சள் நீர் உற்சவமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×