search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    மதுரகாளி அம்மன் கோவில் தேரோட்டம்

    சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலைதிருக்கல்யாண உற்சவமும், இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதிஉலாவும் நடந்தது.

    அதை தொடர்ந்து நேற்று காலை மதுரகாளி அம்மனுக்கு மஞ்சள் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மதுரகாளி அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10.20 மணிக்கு மதுரகாளி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.

    தொடர்ந்து நாதஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் தேரை இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., சட்டமன்ற முன்னாள் துணை சபா நாயகர் வரகூர் அருணாசலம், இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் செந்தில்குமார், சிறுவாச்சூர் கோவில் செயல் அலுவலர் ஜெயதேவி, முன்னாள் அறங்காவலர் ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


    சிறப்பு அலங்காரத்தில் மதுரகாளி அம்மன்.

    தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நான்கு வீதிகள் வழியாக பக்தர்கள் படை சூழ அசைந்து ஆடி வந்தது. பின்னர் தேர் மதியம் 2.15 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி சிறப்பு அன்னதான நிகழ்ச்சி ஸ்ரீ மதுரகாளி அம்மன் அன்னதான அறக்கட்டளை சார்பில் நடந்தது.

    தேரோட்டத்தில் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், வரகுபாடி, அய்யலூர், நாரணமங்கலம், காரை, புதுக்குறிச்சி, கல்பாடி, எறையசமுத்திரம், நொச்சியம், விளாமுத்தூர், மருதடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சோலை முத்தையா வழிபாடு நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மேல்வாகன சத்திரத்தில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு ஊஞ்சல் விழாவும், 21-ந்தேதி விடையாற்றி விழா, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் திருவீதி புறப்பாடு, 22-ந் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏற்றத்துடன் திருவிழா நிறைவு அடைகிறது.

    Next Story
    ×