search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி ஸ்ரீசாய் சத் சரிதம் எழுதிய ஹேமந்த் பந்த்
    X

    சீரடி ஸ்ரீசாய் சத் சரிதம் எழுதிய ஹேமந்த் பந்த்

    சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாற்றையும் அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    சீரடி சாய்பாபாவின் புகழ் முதலில் மராட்டியம் மாநிலத்தில்தான் பரவியது. இதற்கு வித்திட்டவர் தாஸ்கணு மகாராஜ். இவர் போலீஸ்காரராக பணியாற்றியவர். சாய்பாபா பற்றி இவருக்கு, இவரது உயர் போலீஸ் அதிகாரியான நானா சாகேப் சந்தோர்கர் மூலம் தெரிய வந்தது.

    நானா சந்தோர்கர் எப்போதெல்லாம் சீரடிக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் தாஸ்கணுவையும் தம்முடன் அழைத்து செல்வார். முதலில் சாய்பாபா மீது தாஸ்கணுவுக்கு எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை என்றாலும் பாபா அவரை விட்டுவிடவில்லை.

    ஒருநாள் பாபா அவரிடம், “உன் போலீஸ் வேலையை விட்டு விடு. உனக்கு உயர்ந்த நிலை கிடைக்கும்” என்றார். ஆனால் தாஸ்கணுவுக்கு போலீஸ் வேலையை விட விருப்பம் இல்லை. ஏதாவது காரணம் சொல்லி அவர் நாட்களை கடத்தியபடி இருந்தார். ஒருநாள் அவர் காவல் நிலைய பணத்தை கையாடல் செய்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த தாஸ்கணு வேறு வழி தெரியாமல் பாபாவிடம் வந்து தஞ்சம் அடைந்தார். இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றினால் போலீஸ் வேலையை விட்டு விடுவதாக உறுதியளித்தார். அதன்படி தாஸ்கணு போலீஸ் வேலையை ராஜினாமா செய்தார். அவர் பாபாவிடம், “நான் போலீஸ் வேலையை விட்டதால், என் குடும்பம் வறுமையில் வாட நேரிடும்” என்றார். அவருக்கு ஆறுதல் கூறிய பாபா, “உனக்கு நல்ல குரல் வளம் உள்ளது. இறைவன் குறித்து பாடல்களை பாடு. உன் வாழ்க்கை செழிக்கும்” என்றார்.

    பாபா சொன்னபடி தாஸ்கணு நடந்து கொண்டார். இதனால் அவர் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் இருந்தது. ஈஷா உபநிடதம் எனும் நூலை தாஸ்கணு மராத்தியில் இருந்து மொழி பெயர்த்தார். அப்போது அவருக்கு மொழி பெயர்ப்பில் நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டன. அந்த சந்தேகங்களை பாபா தீர்த்து வைத்தார்.

    ஒருநாள் அவர் பாபாவிடம், “நான் புனித நீராட பிரயாகை செல்லலாம் என்றிருக்கிறேன்” என்றார். அதற்கு பாபா புனித நீராட நீ அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை என்று கூறி தன் கால் கட்டை விரலில் இருந்து கங்கை, யமுனை நதி தண்ணீரை பாய்ந்து வரச்செய்தார்.

    அந்த புனித நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்ட தாஸ்கணு மகிழ்ச்சியால் கண்ணீர் வடித்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு சாய்பாபா மீதான பாசம் அவருக்கு அதிகரித்தது. சாய்பாபா பற்றி அவர் பாடல்கள் இயற்றினார். மராட்டியத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு பாபா படத்தை எடுத்துச் சென்று பாடல்கள் பாடினார்.



    காகா சாகேப் தீட்சித், ஹேமந்த்பந்த் என்ற தபோஸ்கர்.

    ஊர், ஊராக சென்று அவர் நடத்திய கதாகாலசேபங்கள் பாபா பற்றிய மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தின. தாஸ்கணு தன் அருமையான குரல் வளத்தால், பாபாவின் லீலைகள் பற்றி பாடினார். பாபா செய்த அற்புதங்களையும் தாஸ்கணு மக்களிடம் எடுத்துச் சொல்ல தவறவில்லை. இதன் காரணமாக தொலை தூர கிராம மக்கள் தினமும் சீரடிக்கு புறப்பட்டு வந்தனர். பாபாவை தரிசனம் செய்து பலன் பெற்றனர்.

    பாபா பற்றி அவர் எழுதிய பாடல்கள் ஆரத்தி பாடல்களாக இன்றும் உள்ளன. பாபா பற்றிய தகவல்களை தொகுத்து புத்தகமாகவும் தாஸ்கணு வெளியிட்டார். இதனால் பாபாவின் முக்கிய பக்தர்களில் ஒருவராக தாஸ்கணு திகழ்ந்தார். பாபாவின் இன்னொரு பக்தர் காகா சாகேப் தீட்சித். இவரது உண்மையான பெயர் ஹரி சீதாராம் தீட்சித். ஆனால் பாபா இவரை எப்போதும் “காகா” என்றுதான் அழைப்பார்

    காகா சட்டம் பயின்று மும்பையில் மூத்த வக்கீலாக பணியாற்றி வந்தார். லண்டனில் ஒரு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டிருந்த அவரை நானா சந்தோர்கர்தான் சீரடி சென்று பாபாவை சந்தித்து ஆசி பெறும்படி கூறினார். அதன்பின் காகா சாகேப் தீட்சித் சீரடி சென்று பாபாவை தரிசனம் செய்தார். அவர் மனம் அமைதி அடைந்தது.

    ஒரு சமயம் காகாசாகேப் தீட்சித் ஆழ்நிலை தியானத்தில் இருந்தபோது அவருக்குள் “விட்டல்” தோன்றினார். அன்று மாலை அவர் பாபாவை பார்க்க சென்றபோது, “என்ன... விட்டலன் வந்தானா? கெட்டியாகப் பிடித்துக் கொள்” என்று கூறி சிரித்தார். காகாவுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நமது தியானத்தில் வந்த காட்சி பாபாவுக்கு எப்படி துல்லியமாகத் தெரிந்தது என்று பூரித்துப் போனார்.

    மற்றொரு நாள் அவர் சூட்கேஸ் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு சென்று பாபாவிடம் கொடுத்தார். அதை வாங்கித் திறந்த பாபா, பணத்தை அள்ளி அள்ளி பக்தர்கள் கூட்டத்துக்குள் வீசினார். இதன்மூலம் எல்லாவற்றையும் ஒரே மாதிரி சமமாக பாவிக்கும் குணம் பாபாவிடம் இருப்பதை அறிந்து காகா அவர் மீது மேலும் பக்தி கொண்டார்.

    ஒருதடவை பாபாவுக்கு அணிவிக்க மாலை வாங்கிய அவர் 25 ரூபாய் தட்சணை கொடுக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். துவாரகமாயி மசூதிக்கு சென்று கூட்டத்துக்குள் புகுந்து பாபாவுக்கு மாலையை அணிவித்தார். ஆனால் பாபாவுக்கு கொடுக்க வேண்டிய 25 ரூபாய் தட்சணையை மறந்து விட்டார்.

    அவர் திரும்பி செல்ல முயன்றபோது, “காகா 25 ரூபாய் தர வேண்டுமே கொடுத்து விட்டுப் போ” என்றார் பாபா. காகாவுக்கு தூக்கிவாரி போட்டது. தன் மனதில் உள்ளதையும் அறியும் ஆற்றல் கொண்டவராக இருந்ததால் அவரை கண் கண்ட தெய்வமாக காகா வழிபட்டார்.

    பாபா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் வேதவாக்காக கருதினார். ஒரு தடவை ஆடு ஒன்றை வெட்டுமாறு பாபா கூறியபோது பலரும் மறுத்து ஓடியபோது, பிராமணரான காகா சாகேப் தீட்சித் மட்டும் பாபா உத்தரவை நிறைவேற்ற அரிவாளை ஓங்கினார். அவரை தடுத்து நிறுத்திய பாபா, தம் மீது தீட்சித் வைத்திருந்த நம்பிக்கையையும் பக்தியையும் பாராட்டினார்.


    தாஸ்கணு மகாராஜ்

    பாபா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், பக்தர்களின் அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சாய்பாபா மரணம் அடைந்த பிறகு சீரடியில் “சாய் சமஸ்தான்” நிறுவியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பாபா சமாதி அடைந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாதசி தினத்தன்று அவர் மரணம் அடைந்தார்.

    சாய்பாபாவின் மற்றொரு முக்கிய பக்தர் அன்னாசாகேப் தபோல்கர். இவருக்கு பாபா பற்றி காகா சாகேப் தீட்சித்தான் முதலில் கூறினார். ஆனால் தபோல்கருக்கு, சாய்பாபாவை சந்திக்க விருப்பமே இல்லை. காகா சாகேப் தீட்சித் வலியுறுத்தியதால் ஒருதடவை அவர் சீரடிக்கு புறப்பட்டு சென்றார். பாபாவை பார்த்ததும், அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார். தபோல்கர் மனம் அமைதி அடைந்தது.

    அதன்பிறகு அவர் அடிக்கடி சீரடி சென்று பாபாவை சந்தித்து ஆசி பெற்றார். ஒருநாள் அவரை “ஹேமந்த்பந்த்” என்று அழைத்தார். அது எல்லா பக்தர்களுக்கும் ஆச்சரியம் அளித்தது. ஏனெனில் ஹேமந்த்பந்த் என்பவர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தவர். அந்த ஞானியின் பெயரைச் சொல்லி படிப்பறிவு இல்லாத தன்னை பாபா அழைப்பது ஏன் என்பது புரியாமல் தவித்தார். ஆனால் பாபா... ஒருவரை ஒரு பணிக்காக தேர்வு செய்து விட்டால் அதைத் தடுக்க யாரால் முடியும்?

    சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள், பக்தர்கள் மத்தியில் பாபா கூறிய கதைகள், சொற்பொழிவுகள், அறிவுரைகள் ஆகிய அனைத்தையும் தபோல்கர் தொகுத்தார். அவற்றை கொண்டு சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை வெளியிட, அவர் விரும்பினார். ஷாமா என்ற பக்தர் மூலம் பாபாவிடம் அவர் அதற்கு அனுமதி கேட்டார். பாபா ஒரு நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்தார். “என்னைப் பற்றி எழுத தபோல்கருக்கு நானே உதவி செய்வேன். ஆனால் அந்த புத்தகத்தில் அவர் தம் சொந்த கருத்துக்களை திணிக்கக்கூடாது. மற்றவர்களின் கருத்தை மாற்றக் கூடாது” என்றார்.

    இதைத்தொடர்ந்து 1916-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு பாபா சமாதி அடையும் வரை 2 ஆண்டுகள் பல இடங்களுக்கு சென்று பலரை சந்தித்து பாபா பற்றிய முக்கிய தகவல்களை எல்லாம் தொகுத்து விட்டார். இந்த 2 ஆண்டுகளில் அவரால் ஓரளவுதான் எழுத முடிந்தது. அந்த புத்தகத்தை அவர் எழுதி முடிப்பதற்குள் மரணம் அடைந்தார். இதையடுத்து 1929-ம் ஆண்டு அந்த புத்தகம் பலரால் சீரமைத்து எழுதி முடிக்கப்பட்டது.

    அந்த புத்தகம்தான், “ஸ்ரீ சாய் சத் சரித்திரம்”. இன்று இந்த புத்தகம் இல்லாத சாய் பக்தரின் வீடே இல்லை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு சாய்சத் சரிதம் பக்தர்களுடன் இரண்டற கலந்து விட்டது. இதன்மூலம் சாய் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஹேமந்த்பந்த் என்ற தபோல்கர் மிகவும் தெரிந்தவராக உள்ளார். பாபாவின் புகழ் பரவ, பரவ தபோல்கரின் சேவையையும் மக்கள் கூடுதலாக உணர்வார்கள்.

    இதுபோன்று பாபாவின் அன்பு பிடியில் சிக்கியிருந்த மேலும் சில முக்கிய பக்தர்கள் பற்றி அடுத்தவாரம் (வியாழக்கிழமை) காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×