search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் ராமானுஜர் ஆற்றிய ஆன்மிக தொண்டு
    X

    திருப்பதியில் ராமானுஜர் ஆற்றிய ஆன்மிக தொண்டு

    திருமலைக் கோவிலில் ராமானுஜரால் அன்று ஏற்படுத்தப்பட்ட பல வழக்கங்கள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த கதையை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    விசிட்டாத்வைத மதத்தை நமது நாட்டில் ஆழமாக காலூன்ற செய்த பெருமை ராமானுஜருக்கே. ஸ்ரீரங்கத்தில் ஆச்சாரியார் ஆளவந்தாருக்குப் பின் அவரது பீடத்தில் ஏறிய ராமானுஜர் திருவாய்மொழிக்கு அனைவரும் கேட்டு மகிழும் வகையில் பொருள் கூறினார். அப்போது ஒரு பாடலில் ‘சிந்து பூ மகிழும் திருவேங்கடம்’ என்பதற்குப் பொருள் கூறும்போது ‘மலர் மண்டபமாகிய திருமலையில் சிறப்பாக நந்தவனம் அமைத்துத் தொண்டு செய்ய யாரேனும் இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

    அதற்கு அனந்தாழ்வார் எழுந்து, சம்மதித்து, ஆச்சாரியின் திருவடிகளை வணங்கி, விடை பெற்றுக் கொண்டு திருமலைக்குச் சென்றார். எனவே ராமானுஜரின் ஆணையின்பேரில் அனந்தாழ்வார் திருமலையில் சிறந்ததோர் நந்தவனம் அமைத்து அதற்கு ராமானுஜர் நந்தவனம் என்று பெயரிட்டு நாள்தோறும் அங்கு மலர்கள் பறித்து மாலை கட்டித் திருவேங்கடமுடையானுக்குச் சாத்தி வந்தார்.

    திருமலையில் இன்றும் அந்த நந்தவனம் இருக்கிறது. ஒருமுறை ராமானுஜர் தன் சீடர்களுடன் திருவேங்கடத்தை நோக்கிப் புறப்பட்டார். அக்காலத்தில் திருப்பதியில் இருந்து திருமலைக்குப் படிகள் வழியாகவே போக வேண்டியிருந்தது. திருமலையே எம்பெருமான் திருமேனி என்று கருதிய ராமானுஜர் தன் திருவடிகளால் மிதித்தேற அஞ்சி முழங்கால்களினாலேயே நடந்து ஏறினார்.



    அப்போது ஓரிடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டார். எனவே அதன் நினைவாகவே அந்த இடத்தில் ஸ்ரீபாஷ்யக்காரர் கோவில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தினந்தோறும் திருமலையிலிருந்து அந்த சந்நிதிக்கு பிரசாதங்கள் முதலியவை கொண்டு வரப்பட்டு ஆராதனை நடத்தப்படுகிறது. ராமானுஜர் திருமலையின் வைகுண்ட வாயிலை அடைந்த போது, அவரது தாய்மாமனாகிய திருமலை நம்பிகளும் அனந்தாழ்வானும், ஏகாங்கிகளும், ஜீயர்களும் அவரை வணங்கி வரவேற்றனர்.

    அங்கு மூன்று நாட்கள் தங்கி விட்டுக் கீழ்த்திருப்பதிக்கு இறங்கி வந்தார். திருமலை நம்பிகள் இல்லத்தில் தங்கினார். ராமானுஜர் தம் சீடர்களுடன் எல்லா இடங்களையும் சிறப்புக் கண்டு வைணவத்தைப் பரப்பினார். அதன் பிறகு - கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமிகள் ஆலயம் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்தார். பெரும்பாடுபட்டு மன்னர்களின் துணைகொண்டு அந்த ஆலயம் நிறுவினார். அங்கேதான் அவருக்கு விட்டல் தேவன் சீடரானார்.

    தம் சீடர்களுடன் ஸ்ரீரங்கத்துக்குப் புறப்படும் முன் மீண்டும் திருமலைக்குச் சென்றார். அங்கே சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பெரிய சண்டை நடந்து கொண்டிருந்தது. ராமானுஜர் அவர்களது சண்டையினைத் தீர்க்க மிகவும் முயன்றார். திருமலைக் கோவிலும் வேங்கடவனும் சைவ மதத்தைச் சேர்ந்தது என்றும், இல்லை இல்லை வைணவ மதத்தைச் சேர்ந்தது என்றும் இரு பிரிவினரும் வாதாடினார்கள்.



    வைணவப் பெரியாராக இருந்த ராமானுஜருக்கு எப்படியாவது திருமலையை வைணவக் கோவிலாகவே நிலைநிறுத்த வேண்டும் என்கிற கட்டாயம் வந்தது. பழங்காலந்தொட்டே திருமலை நூற்றெட்டுத் திருப்பதிகளுக்குள் சிறந்ததென்றும் இரு ஆழ்வார்களைத் தவிர மற்றவர் அனைவரும் திருவேங்கடத்தைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள் என்றும் பலப்பல ஆதாரங்களைக் கூறிய போதிலும் சைவர்கள் சம்மதிக்கவில்லை.

    இறுதியாக இரு கட்சிகளும் பேசிப் பேசி ஒருவித முடிவுக்கு வந்தனர். ராமானுஜரே அதை தீர்மானிப்பது என்று முடிவு செய்தார்கள். சிவனுக்கு உரிய திரிசூலமும், டமருகமும், திருமாலுக்கு உரிய சங்கும், சக்கரமும் திருக்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டு கதவுகளை மூடினார்கள். மறுநாள் காலையில் இரு தரப்பினர் முன்னிலையில் கதவுகள் திறக்கப்பட்டன.

    ஏழுமலையான் கரங்களில் சங்கும், சக்கரமும் இருந்தது.திரிசூலமும் டமருகமும் கீழேயே இருந்ததாகவும், அதனைக் கண்ட வைணவர்கள் மகிழ்ச்சி அடைந்து ராமானுஜரே வென்றார் என்று மகிழ்ந்தார்கள். அதனால் ராமானுஜருக்கு “அப்பனுக்குச் சங்காழியளித்த பெருமான்” என்கின்ற சிறப்பு பெயரையும் வழங்கினார்கள்.
    அன்றைய சமய அரசியலில் வென்ற ராமானுஜர் திருமலைக் கோவிலின் பூஜைகளில் பல சடங்குகளையும், கோவிலில் பல சீர்திருத்தங்களையும் செய்துள்ளார்.
    ராமானுஜரால் அன்று ஏற்படுத்தப்பட்ட பல வழக்கங்கள் இன்றளவும் திருமலைக் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×