search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி - சுந்தரேசுவரர் திருத்தேர் உலா
    X

    மீனாட்சி - சுந்தரேசுவரர் திருத்தேர் உலா

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்திரை திருவிழா ஆகும்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்திரை திருவிழா ஆகும். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதில் சிவபெருமானாகிய சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பார்வதியாகிய மீனாட்சி அம்மனுக்கும் கோவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இந்த திருக்கல்யாணத்தை கோவிலில் வந்து காணமுடியாமல் முதியவர், பக்தர்கள் தவித்தனர். அவர்களின் குறைகளை போக்கும் விதமாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பிரியாவிடையுடன் திருக்கல்யாண கோலத்தில் பெரிய தேரில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். மேலும் தேரில் அனைத்து தேவர்களும் எழுந்தருளுவதால், அன்றைய தினம் ஓடும் தேரை தரிசிப்பது, அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதற்கு சமமாகும். அதனால் தான் அன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேரை கி.பி.16-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் சுந்தரேசுவரர் சுவாமிக்கு பெரியதாகவும், மீனாட்சி அம்மனுக்கு சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டது. மேலும் அந்த தேரில் 64 திருவிளையாடல் புராணங்கள், திருவிழா பற்றிய சிறப்புகள் மரச்சிற்பங்களாக வடிக்கப்பட்டு இருப்பதை காணமுடியும். தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்கு சமானம். அதனால் 8 அடுக்குகளாக தேர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.



    முன்பு இந்த தேரோட்டம் மாசி மாதத்தில் நடந்ததாகவும், அதன் பின்பு நாயக்கர் காலத்தில் தான் சித்திரை மாதத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இதற்காக பல வண்ணத்துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தேரின் முன்புறமும் பிரம்ம தேவர் அமர்ந்திருக்கும் நான்கு குதிரைகளுடன் தேரை ஓட்டிச் செல்வது போன்று சிலை அமைக்கப்பட்டிருக்கும்.

    தேரில் பூச்சரங்கள் தொங்க விடப்பட்டு, தேரின் உள்பகுதியில் இருந்த சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் பளிச்சிடும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் “ஹரஹர சுந்தர மகாதேவா”, “சம்போ சங்கர மகாதேவா”, “மீனாட்சி சுந்தர மகாதேவா”, “எல்லோரும் இழுக்கணும் மகாதேவா” என்று கோஷங்களை எழுப்பி பக்தர்கள் தேர்களை இழுப்பார்கள்.

    இந்த தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி என்று 4 மாசி வீதிகளில் வலம் வரும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் மதுரைக்கு வருவார்கள். பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே தேர்கள் ஆடி அசைந்து அழகு மிளிர மிதந்து வரும் காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    Next Story
    ×