search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவில் தேர் பக்தர்கள் மத்தியில் அசைந்தாடி வந்த காட்சி.
    X
    தஞ்சை பெரியகோவில் தேர் பக்தர்கள் மத்தியில் அசைந்தாடி வந்த காட்சி.

    சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்

    சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
    சோழர் கால கட்டிட கலைகளுக்கு சான்றாக தஞ்சை பெரியகோவில் விளங்கி வருகிறது. உலக பிரசித்தி பெற்ற இந்த பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினான். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங் களில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடும், மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சை பெரியகோவிலில் சிறப்புபூஜை நடந்தது. பூஜைகள் முடிந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பெரியகோவிலில் இருந்து தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்திற்கு சிவாச்சாரியார்கள் கொண்டு வந்தனர்.

    பின்னர் தியாகராஜர், கமலாம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். ஓதுவார்கள் தேவாரபாடல்களை பாடினர். பெண்கள் கோலாட்டம் ஆடியபடி மேலவீதியில் இருந்து புறப்பட்டனர். பெரிய தேருக்கு முன்னால் அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளிய சப்பரங்கள் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து தேரில் எழுந்தருளிய தியாகராஜர்- கமலாம்பாளுக்கு சிவாச்சாரியார்கள் ஆகமபூஜைகளை செய்து தீபாராதனை காண்பித்தனர். காலை 6.26 மணிக்கு பச்சை கொடி அசைக்கப் பட்டவுடன் அமைச்சர் துரைக்கண்ணு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.



    பின்னர் திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பெரிய தேருக்கு பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டீகேஸ்வரர் சப்பரங்கள் சென்றன. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக 14 இடங்களில் தேர் நிறுத்தப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.

    பக்தர்களுக்கு உதவியாக தேர் சக்கரத்தை நகர்த்த பொக்லின் எந்திரமும் பயன்படுத்தப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சக்கரத்தை எளிதில் நிறுத்தும் வகையில் தேரின் முன்பக்க சக்கரங் களில் நவீன பிரேக்(ஹைட்ராலிக் பிரேக்) பொருத்தப் பட்டிருந்தது. தேர் மேலராஜவீதி, வடக்குராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி வழியாக பவனி வந்து தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்தை மதியம் 12.05 மணிக்கு வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை, ரெங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், பால் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் உமாதேவி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி 4 ராஜவீதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. தேரோடும் வீதிகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×