search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி கற்பகவிருட்சம், சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலா வந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற மே மாதம் 9-ந்தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி சாமி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர்.

    சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய கணேஷ் பட்டர் காலை 10.01 மணிக்கு 66 அடி உயர கொடிக்கம்பத்தில் ரிஷபம் வரைந்த கொடிப் பட்டத்தை ஏற்றினார். பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது.



    அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கோவில் ஓதுவார்கள் சோமு, மணிகண்டன், அவினாசி, ரத்தினம், அம்ரீஸ் ஆகியோர் கொடிப்பாட்டு பாடினார்கள். கொடியேற்றம் நடந்த பிறகு மேலே இருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்பு அம்மனும், சுந்தரேசுவரரும், சாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். பின்னர் கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினார்கள். தொடர்ந்து இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், கோவில் இணை கமிஷனர் நடராஜன், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரண்டாம் நாள் விழாவையொட்டி இன்று (29-ந்தேதி) காலை தங்கச் சப்பரத்தில் அம்மனும், சுந்தரேசுவரரும், இரவு பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும், அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.



    சித்திரை திருவிழா பற்றி, கோவில் பட்டர் கூறுகையில், “இறைவனாகிய சிவபெருமான், பக்தர்களாகிய மக்கள் வந்து தன்னை தரிசனம் செய்யாவிட்டாலும், தானே நேரில் வந்து அருள்பாலிக்கிறேன் என்பதை விளக்கும் விதமாக தான் இந்த விழா நடக்கிறது” என்றார்.

    கொடியேற்றம் முடிந்தபின் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடக்கிறது. இதற்காக திருக்கல்யாண மேடை வெளிநாட்டு, உள்நாட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கல்யாண மேடைக்கு அருகில் 300 டன் குளு, குளு வசதியும், பழைய திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் குளு, குளு வசதியும் செய்யப்பட்டுள்ளது.



    12 ஆயிரத்து 500 பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6000 பேர் இலவசமாகவும், மீதி உள்ளவர்கள் கட்டணம் செலுத்தியும் திருக்கல்யாணத்தை காணலாம். மேலும் 20 இடங்களில் எல்.இ.டி. டி.வி. வைக்கப்படும். திருக்கல்யாணத்தை காணவரும் பக்தர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டிலுடன், பிரசாத பை வழங்கப்படும்.

    இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக கிழக்கு, தெற்கு சித்திரைவீதி, வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக தகர நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×