search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது

    நெல்லை சந்திப்பு குறுத்துத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை சந்திப்பு குறுத்துத்றையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி சுப்பிரமணிய கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

    விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனையும், மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆறுமுகருக்கு உருகு சட்டசேவையும், சுவாமி தண்டியல் பல்லக்கில் வீதி உலாவும் நடக்கிறது.



    இதைத்தொடர்ந்து வெற்றிவேர் சப்பரத்தில் ஆறுமுகபெருமான் எழுந்தருளலும், சிறப்பு நீராட்டு வழிபாடும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி உருத்திரன் காட்சியில் சுவாமி நெல்லை டவுனுக்கு எழுந்தருளல் நடக்கிறது. 6-ந் தேதி காலை 7 மணிக்கு வெள்ளை சாத்தி நான்முகன் காட்சியிலும், இரவு 7 மணிக்கு பச்சை சாத்தி திருமால் காட்சியிலும் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. 7-ந்தேதி காலையில் தண்டியல் பல்லக்கிலும், இரவில் திருக்கயிலாய வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. மறுநாள்(9-ந் தேதி) காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குறுக்குத்துறை சுப்பிரமணிய கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×