search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா தொடங்கியது

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரசித்திப் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு தம்பையா ஓதுவாரின் திருமுறை பாராயணம் நடந்தது. 8 மணிக்கு கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் நான்கு ரதவீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு சென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

    8.30 மணிக்கு மேளதாள பஞ்சவாத்திய வெடிமுழக்கத்துடன் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் தெற்கு மண்மடம் பிரதீபன் நம்பூதிரி ஏற்றினார். பின்னர், கொடிபீடத்திற்கு வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தினார். அதனை தொடர்ந்து தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது. கொடியேற்று விழா நிகழ்ச்சியில், குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் பாரதி, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பரத்தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.

    இரவு 11 மணிக்கு சப்த வர்ண காட்சியும், 10-ம் திருவிழாவான 6-ந் தேதி இரவு 8 மணிக்கு சாமியும், அம்பாளும், பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை தெப்பக்குளத்தை சுற்றி உலா வரும் தெப்பத்திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், பக்த சங்கத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×