search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
    X

    தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது

    அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரத்தில் உள்ள தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு ரூ. 1.30 கோடி செலவில் புதிய ராஜகோபுரமும், பிரகார மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கோ பூஜை மற்றும் நவதானியங்கள் முளையிடுதல், மாலை 6 மணிக்கு வாஸ்து பூஜை, இரவு 8 மணிக்கு பால கணபதி பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.

    29-ந் தேதி அதிகாலை 6 மணிக்கு துர்க்கா ஹோமம், காலை 8 மணிக்கு கஜபூஜை, 10 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் யானை, குதிரை, முத்துக்குடை மற்றும் மேளத்தாளத்துடன் புனித நீர் எடுத்து வருதல் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது.

    30-ந் தேதி அதிகாலையில் தீபாராதனை, காலை 9 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம், 10 மணிக்கு மூல தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், பன்னீர் குடம் எடுத்து வருதல், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் போன்றவை நடைபெறுகிறது.

    மதியம் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும் தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது. சென்னை தொழிலதிபர் டாக்டர் சி.என். ராஜதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×