search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதற்காக வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 30-ந்தேதி காலை மிதுன லக்கனத்தில் தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்குகிறது.

    இதில் மே மாதம் 4-ந்தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் செட்டிப்பெண் மருத்துவம் என்ற ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுகபிரசவ மருந்து, பீஜாதானம் (வரதானம் நெல்) பக்தர்களுக்கு வழங்கப்படும். குழந்தை தொட்டிலில் இடும்விழா காலை விழாவாகவும், மாலை விழா அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி தெரு அடைச்சான் விழாவாக நடைபெற உள்ளது.



    இதில் 6-ம் நாளான 5-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், திருக்கல்யாண உற்சவத்தில் மாலை மாற்றுதல் வைபவம் ஆகியவையும் நடைபெறும். பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 11 மணிக்கு திரு நாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மொய் செய்து கல்யாண விருந்து சாப்பிடுவார்கள்.

    இதில் 9-ம் நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு சாமி புறப்பாடு செய்யப்பட்டு தேர் நிலைக்கு விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு தேரிலும், சுவாமி அம்பாள் சோமாஸ் கந்தராக சுவாமி தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் காலை 6 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

    பின்னர் 7 மணியளவில் சகல வாத்தியங்களுடன் யானை முன்னே செல்ல திருதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர் கீழ ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடையும். தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×