search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோவில் திருவிழா இன்று நடக்கிறது
    X

    பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோவில் திருவிழா இன்று நடக்கிறது

    ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் பழமை வாய்ந்த பள்ளத்து கருப்பசாமி கோவில் திருவிழா இன்று இரவு நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் பழமை வாய்ந்த பள்ளத்து கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் 2-வது புதன்கிழமை இரவு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14-ந் தேதி மஞ்சள் முடிப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதன் உச்சக்கட்ட திருவிழாவானது இன்று (புதன்கிழமை) இரவு மிகப்பெரிய ஓர் இரவு திருவிழா நடக்கிறது. இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பள்ளத்து கருப்பசாமிக்கு ஆடுகளை பலியிட்டு மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் இருந்தே உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுப்பார்கள். இந்த திருவிழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். கோவில் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கோவில் குறித்து பக்தர்கள் கூறுகையில், “பல தலைமுறைகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம், பசும்பளூர் கிராமத்தில் இருந்து பட்டணம் கிராமத்தில் குடியேறிய முன்னோர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குலதெய்வமான கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து வழிபட பசும்பளூர் சென்று வந்தனர். அதற்காக மாட்டு வண்டியில் சென்று வருவார்கள். அப்படி வழிபாடு சென்ற ஒரு சமயம் பெருமழை பெய்தமையால் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல நாட்கள் ஆகியும் வெள்ளம் வடியாததால் ஆற்றங்கரையிலேயே பொங்கல் வைத்துவிட்டு திரும்பினார்கள். அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முடியவில்லையே என்று மனம் வருந்தினார்கள்.

    அப்போது அவர்கள் மனதில் நான் உங்களோடு வந்து பட்டணத்திலேயே தங்கி விடுகிறேன் என்று சாமி கூறியது. மிகுந்த மனக் குழப்பத்தோடு மாட்டு வண்டிகளில் அவர்கள் ஊர் திரும்பினார்கள். அவர்களின் மாட்டு வண்டியில் அவர்கள் அறியாமல் ஒரு கல் இருந்ததை கண்டு அந்த கல்லை வண்டியில் இருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி போட்டனர்.

    பின்னர் அவர்கள், கனவில் தோன்றிய கருப்பசாமி நீங்கள் தூக்கி போட்ட அந்த கல்தான் நான் (சாமி) என்றும், அந்த இடத்திலேயே பதி கொள்வேன் என்றும், இனி என்னை நீங்கள் இங்கேயே வழிபடலாம் என்றும், கூறியது. அது முதல் முன்னோர்கள் பள்ளத்து கருப்பசாமியை வழிபட தொடங்கினார்கள்” என்று கூறினர். இந்த விழாவில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
    Next Story
    ×