search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தெப்பதிருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை தெப்ப திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்கி மே மாதம் 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    27-ந்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றமும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும் நடக்கிறது. தினமும் காலையும், மாலையும் சாமி வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    28-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சமய வளர்ச்சி மாநாடும், 76-வது ஆண்டு தேவார பாடசாலை விழாவும் நடைபெறுகிறது. 1-ந்தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகம் நடக்கிறது.

    3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு திருச்சாந்து உற்சவமும், 5 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு மண்டகப்படியும், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.



    4-ந்தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதிஉலா வருதல், 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும், இரவு 7 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதிஉலா வருவதும் நடைபெற உள்ளது.

    5-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், இந்திரன் தேர், ஆகிய 3 தேர்கள் வருகின்றன. மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளலும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருவதும், 11 மணிக்கு சப்தாவர்ண காட்சியும் நடைபெறுகிறது.

    6-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பத்தில் சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி தெப்பக்குளத்தை 3 முறை வலம்வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் சங்கத்தினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×