search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்மலை சுப்பிரமணிசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.
    X
    சிவன்மலை சுப்பிரமணிசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு வைத்து பூஜை

    காங்கேயம் சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை இந்த பெட்டிக்குள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம்.

    இந்த முறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார்.

    பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என இரண்டு பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். பின்னர் அதற்கு தினமும் பூஜை செய்யப்படும்.

    உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் கிடையாது. மற்றொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படும். இவ்வாறு, உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



    அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்தப் பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதன்படி, இதற்கு முன் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்த மஞ்சள், குங்குமம் அகற்றப்பட்டு கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஒரு துணியில் வில்வ இலையுடன் 108 ருத்ராட்சம் ஆகியவற்றை கட்டி வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த நிலையில் ருத்ராட்சம் நீக்கப்பட்டு நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வலம்புரி சங்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    இந்த வலம்புரி சங்கை சிவன்மலை அடிவாரத்தில் வசிக்கும் கே.எஸ்.கவுரிசங்கர் என்ற பக்தர் வைத்துள்ளார். இவர், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் குருக்களாக பணியாற்றி வருகிறார். இதுபற்றி கே.எஸ்.கவுரிசங்கர் கூறியதாவது:-

    முருகப்பெருமான் தனது கனவில் வந்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சங்கு வைத்து பூஜை செய்யும்படி கூறினார். நான், வலம்புரி சங்கா? இடம்புரி சங்கா? என்று கேட்க நினைத்தபோது, உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு இருப்பது போல் ஆண்டவன் கண்முன்னே காட்டினார். இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, ஆண்டவன் உத்தரவு பெற்று தற்போது வலம்புரி சங்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்தால் நாட்டில் வறட்சி நீங்கி, மழை பெய்து, நாடு சுபிட்சம் பெருகும் என்று நான் நம்புகிறேன். ஆனால், ஆண்டவனின் அர்த்தம் என்ன என்பது போக, போகத்தான் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×