search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அப்பர் கட்டமுது விழாவை முன்னிட்டு சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபோது எடுத்த படம்.
    X
    அப்பர் கட்டமுது விழாவை முன்னிட்டு சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபோது எடுத்த படம்.

    அப்பரின் பசியை போக்கிய சிவபெருமானை நினைவுபடுத்தும் கட்டமுது விழா

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் நடந்த அப்பரின் பசியை போக்கிய சிவபெருமானை நினைவுபடுத்தும் கட்டமுது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    நாயன்மார்களால் பாடல்பெற்றது சிவஸ்தலமான திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில். அப்பர் காவிரி தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறை சிவஸ்தலத்தில் சிவனை வழிபட்டு அங்கிருந்து திருப்பைஞ்சீலிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பசி களைப்பில் ஓரிடத்தில் மயங்கி சரிந்தார். இதனை அறிந்த சிவபெருமான் தனது அடியாரின் பசியை போக்க ஒரு மனிதர் உருவில் தோன்றினார். அந்த இடத்தில் ஒரு பசுஞ்சோலையையும், நீர்ச்சுனையையும் ஏற்படுத்தினார்.

    அதன் பின்னர் மயக்கத்தில் இருந்த அப்பரை எழுப்பி அவருக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்த பின்னர் கட்டுச்சோறு கொடுத்து பசியாற்றினார். பின்னர் அவருக்கு துணையாக திருப்பைஞ்சீலி கோவில் வரை வந்தார். கோவில் நுழைவாயில் வந்தவுடன் அப்பருடன் வந்த சிவபெருமான் மறைந்துவிட்டார். அப்போதுதான் தனக்கு துணையாக வந்தது சிவன் என்று அப்பர் உணர்ந்தார். சிவனே கட்டுச்சோறு கொண்டு சென்று அப்பருக்கு கொடுத்து உதவிய புராணச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பக்தர்களின் மீது இறைவன் கொண்டுள்ள கருணையை நினைவுபடுத்தும் வகையில் அப்பர் கட்டமுது விழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் அப்பர் கட்டமுது விழா நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் சிவபெருமான் அம்பிகையோடு சென்று அப்பருக்கு உணவளித்து கோவிலுக்கு அழைத்து வந்து காட்சி கொடுத்த நிகழ்ச்சியை முன்னிட்டு பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெற்றது. பின்னர் பன்னாட்டு ஆறுநாட்டு வேளாளர் ஆன்மிக பேரவை, வணிகர் வைசியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    இன்று(சனிக்கிழமை) கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், திருநாவுக்கரசர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான முல்லை, நிர்வாக அதிகாரி ஹேமலதா ஆகியோர் தலைமையில் பன்னாட்டு ஆறுநாட்டு வேளாளர் ஆன்மிக பேரவையினர் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×