search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறைகள்
    X

    நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறைகள்

    நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். நாளை வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    ஹேவிளம்பி வருஷ வெண்பா

    ஏவிளம்பி மாரியற்ப மெங்கும் விலை குறைவாம்
    பூவில் விளைவரிதாம் போர் மிகுதி - சாவதிகம்
    ஆகுமே வேந்தர் அநிநாயமே புரிவர்
    வேகுமே மேதினில் தீ மேல்.

    இவ்வாண்டில் மழை குறையும். பொருட்களின் விலை வீழ்ச்சி அடையும். மலர்களின் உற்பத்தி குறையும். நாடுகளுக்கு இடையே கடுமைமிக்க போர்கள் நடக்கலாம்.

    நிலம் மற்றும் தானியங்களின் விலை குறையும். கல்விக் கட்டணம் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு ஏற்றம் தரும் வருடம் இது. வேளாண்மை வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கும்.

    அக்னி நட்சத்திர அபிஷேகம்

    சித்திரையில் அக்கினி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறந்த புண்ணியங்களைத் தரும். சூரியன் பரணி 3-ம் பாதத்தில் இருந்து ரோகிணி ஒன்றாம் பாதம் வரை கடக்கும் நாட்களை அக்னி நட்சத்திரக் காலம் என்கிறார்கள். ஆனால் சிவபெருமான் குளிர்ச்சியை விரும்புபவர். அதனால் தான் அவர் தலையில் கங்கையை சூடி, பனி மலையான கயிலையில் வீற்றிருக்கிறார். அக்னி நட்சத்திர நாட்களில் அவரை குளிர்ச்சி படுத்தும் விதத்தில் அபிஷேகம் செய்து மகிழ்வித்தால், கோடை வெம்மையால் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து அவர் நம்மை பாதுகாப்பார். அது மட்டுமின்றி நல்ல வரங்களையும் தருவார்.

    ஸ்நானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும்.

    பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

    வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூஜை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும்



    இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்

    சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள்தடவி, பூஜை அறையில் இறைவனின் சந்நி தானத்தில் வைக்க வேண்டும். பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகிவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும்.

    பின், பூஜையில் வைத்திருந்த பஞ்சாங்கத்தை எடுத்து அதில் உள்ள பலன்களைப் படிக்க வேண்டும். ஒருவர் பஞ்சாங்கம் படிக்க மற்றவர்கள் கேட்கும் வழக்கம் உள்ளது. சித்திரைமுதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும். அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும்.

    புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.

    அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

    சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர்.

    Next Story
    ×