search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா (ரலி) பெருவிழாவில் ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா (ரலி) பெருவிழாவில் ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    தக்கலை ஞானமாமேதை பீர்முகம்மது அப்பா தர்கா ஆண்டுவிழா: ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடந்தது

    தக்கலை ஞானமாமேதை பீர்முகம்மது அப்பா தர்கா ஆண்டுவிழாவில் ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தக்கலையில் உலகம் போற்றும் பீர்முகம்மது அப்பா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மெஞ்ஞான மாமேதை செய்கு பீர் முகம்மது சாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு பெருவிழா, மார்க்க பேருரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளிலிருந்தும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது தினமும் இரவு மவுலூது ஓதுதல், மார்க்கப் பேருரைகள் ஆகியவை நடைபெற்றன. கடந்த 10-ந் தேதி பீரப்பா இயற்றிய ரோசுமீசாக்கு மாலை என்ற காப்பிய நூல் 400 ஆண்டுகளுக்கு பிறகு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

    இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்முகைதீன் வெளியிட்டு பேசினார். நீதிபதி அக்பர்அலி, உவைசுதீன் பைசி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நூல் பிரதிகளை அஞ்சுவன்னம் ஜமாத் முன்னாள் தலைவர் ஓ.பி.எம்.ஹசன், முன்னாள் விழாக்குழு தலைவர் கோல்டன் நாசர், சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் அசோசியேஷன் பைசல் சுலைமான், சபீன், ஷேக் சுலைமான், பஹ்ரைன் தக்கலை முஸ்லிம் அசோசியேஷன் காஜாமைதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கியது. இதனை ஜமாத் மக்கள் ஒன்றிணைந்து பாடினர். இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை வரை நடந்தது. நேற்று மாலை பொது நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் ஹைதர் அலி, துணைத்தலைவர் சாகுல் அமீது, செயலாளர் ஷேக் பரீத், பொருளாளர் ஹாரிஸ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஹுசைன் அலி, ஜக்கரியா, சாகுல் அமீது, ஷேக் ஜுனைத் அலி, பி.ஏ. சாகுல் அமீது, ஒய். சாகுல் அமீது, ஷாகிர் அலி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×