search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜகோபுர திருப்பணிக்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பு யாகத்துடன் நடந்த போது எடுத்த படம்.
    X
    ராஜகோபுர திருப்பணிக்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பு யாகத்துடன் நடந்த போது எடுத்த படம்.

    திருவானைக்காவல் கோவிலில் சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி கோவிலில் உள்ள 11 கோபுரங்கள், 25 விமானங்களுக்கு திருப்பணிகள் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறு, சிறு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 22-ந் தேதி மேற்கு வாசல் பிரதான ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் திருப்பணிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுந்தரபாண்டியன் கிழக்கு ராஜகோபுர திருப்பணிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பின்னர் கிழக்கு ராஜகோபுரத்தின் அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர்கள் ரெங்கநாதன், சாத்தப்பன், ராமசாமி, கதிரேசன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×